திருடுபோன நிலங்களின் ஆன்மாவைக் உற்றுக் கேட்டல்.


நேற்றுப் பயணத்தில் ஆழியாள் மொழிபெயர்த்திருக்கும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” என்கிற அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகளின் தொகுப்பை வாசித்தேன். பலவிடயங்களைப் பேசு பொருளாக்கக்கூடிய கவிதைகள் நிறைந்த நூல்.


கவிதையின் பேசுபொருளை எளிமையாய்ச் சொல்லச் சொல்லிக் கேட்டாள் ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது திருடப்பட்ட நிலங்களின் ஆன்மா என்பேன். இதே கவிதைகள் ஆபிரிக்கா, அமெரிக்கா, ஆசியா என காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட எல்லாக் கண்டங்களின் கவிதையும் கூட.  சில சம்பவங்கள் சில இடங்கள் என்பவற்றை மாற்றிவிடால் போதும் அதிகாரத்தால் சிதைந்த அத்தனை நிலத்திற்கும் இது பொருந்தும்.

என்னுடைய அம்மம்மாவும் அப்பப்பாவும்
இரு கருங்காக்கைச் சிறகுகள் போல
கரிய நிறத்தவர்கள்

அவர்கள் போராட வேண்டியிருந்தது
ஒன்றாய்
உயிர் வாழவும்,
காதல் செய்யவும்,
சாவதற்கும் அவர்கள் போராட வேண்டியிருந்தது.
தங்களுக்குச் சொந்தமான
சொந்த மண்ணிலேயே!!!

தோலின் நிறத்தை எடுத்துவிடால் காலனித்துவத்தினால் சிதைந்த எல்லா சதைகளுக்கும் இந்தக் கவி வரிகள் சொந்தமானவை.

இந்தக் கவிதைகளின் மிக முக்கியமான கூறாய் எதிர்ப்புணர்வைச் சொல்வேன். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வடிவத்தில் அதைச் சொல்லுகின்றன. அவுஸ்திரேலிய ராணுவத்தில் பணியாற்றி பின் ராணுவ நினைவு நிகழ்வுகளைப் புறக்கணித்து ஒதுங்கிக் கொள்ளும் பழங்குடி விரன், கேலி செய்து சிரிப்பவர்கள் இருக்கும் இடத்தை விட்டு நகரும் பழங்குடி, காலனியாதிக்கத்தின் விளைவுகளில் ஒன்றாக உருவான கலப்பினத்தவள், அடையாளங்களில் பெருமை கொள்ளும் கூரி இனத்தவர், ஒய்வுக்கு செல்லும் கங்காரு, மரத்தை வெட்ட மனமில்லால் கோடரியைப் புதைத்த மரம்வெட்டி, இறந்தபின்னர் தன்னை தேவாலயத்திற்கு எடுத்து செல்லாதீர்கள் என சொல்லும் பெண், செந்தைல மரங்கள் எல்லாமே இந்த எதிர்ப்புணர்வை ஒவ்வொரு வடிவங்களில் தாங்கி நிற்கின்றன.

இந்த நூலுக்கான அறிமுகத்தில் ஆழியாள் சொல்லியிருக்கும் சிலவரிகள் முக்கியமானவை.

இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதைகள், அவுஸ்திரேலிய ஆதிக்குடிக் கவிஞர்களால் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. ஏனெனில் இக்கவிஞர்களின் இனக்குழு மொழிகள் வாய்மொழி மரபைச் சார்ந்தவை. இக்கவிதைகள் எழுதப்பட்டிருக்கும் வரிவடிவம் ஆங்கிலமாக இருந்தாலும், அவற்றின் ஆன்மா கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடன் கருப்பாக இருக்கின்றது.

அந்தக் கவிதைகளின் ஆன்மா கருப்பாக மட்டும் இல்லை. அதில் ஒரு பச்சையும் கலந்திருக்கிறது. அந்தப் பச்சை ஒரு வித்தியாசமான பச்சை. செம்மண்ணின் நிறமும் காய்ந்துபோன மரப்பட்டையின் நிறமும் பாம்பின் நிறமும் கங்காருவின் நிறமும் மெல்லிய மஞ்சள்ப் பூவின் நிறமும் கலந்த உண்மையான இயற்கையின் பச்சை நிறம் அது. கருப்புக்கு மிகவும் நெருங்கிய பச்சை. இயற்கையின் ஒவ்வொரு கூறையும் தன்னுடைய ஒவ்வொரு கூறாயும், தன்னை இயற்கையின் ஒரு கூறாயும் எண்ணும் வாழ்க்கைமுறை தானாகவே கவிதையில் தெரிகிறது. மண்ணும் தானும் ஒன்றென சொல்லும் கவிதைகளில் மற்றைய கவிதைகளைவிட விடுதலையுணர்வு மேலெழுகிறது.

 சிவப்பு
மரங்களின் இரத்தச்சாறாய் இருக்கிறது
அதன் பகுதியாய்
நான் அமைந்திருக்கிறேன்

எல்லாவற்றிலும் சிறு பாகமாய்
நான்  அமந்திருக்கிறேன்,
அவை அனைத்தும்
என்னில் பாகங்களாய்
நிறைந்திருக்கின்றன.

சிலாகித்துச் சொல்லவும் மீள மீள வாசிக்கவும் கொண்டாடித் தீர்க்கவுமான பல கவிதைகள் கொண்ட ஒரு தொகுப்பு. தன்னுடைய நிலத்தையும், தன்னுடைய அடையாளத்தையும் பறிகொடுத்த அல்லது பறிகொடுத்துக் கொண்டிருக்கும் எவரும் தன்னுடையதாக உணரக்கூடிய கவிதைகளை தொகுத்துத் தந்திருக்கிறார் ஆழியாள்.
-அதீதன்

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?