தெய்வத்தின் நாக்கு

"இந்தக் கதய இதோட நிப்பாட்டினா எல்லாருக்கும் நல்லம். தாரதத் தீண்டுபோட்டு ஒரு மூலையில் கிடக்கவேணும். எனக்கு யாரும் படிப்பிக்க வெளிக்கிட வேணாம்" பாக்கியத்தின் முகத்தில் அடித்தபடி சொல்லிவிட்டு மோட்டார் வண்டியை உதைக்கத் தொடங்கினார் ராஜேந்திரன். வண்டியை இயக்க அவர் உதைத்த ஒவ்வொரு உதையையும் கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் முந்தய கணத்தில் மகனிடம் வாங்கிய பேச்சிலிருந்து இன்னமும் வெளிவரமுடியாமல் இருக்கும் தாய். சொற்கள் விழுந்த வேகமும் இப்போது உதை விழுகிற வேகமும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடாத்த முடிவெடுத்தால் காலின் விசை இயந்திரத்தை போய்ச் சேர முன்னர் பாக்கியத்தின் இதயத்தில் மகன் சொன்ன சொற்கள் குறைந்தது ஆயிரம் ஈட்டிகளையாவது இறக்கியிருக்கும். தன் மகனிடமிருந்து அவரை நோக்கி இத்தனை வெம்மையான சூடு சொற்கள் வந்தது இதுவே முதல் முறை. "அலாட்டாமல் கிடவுங்கோவன்", "வயசுபோன காலத்தில சும்மா கிடந்தால் நல்லம்" என்று ராஜேந்திரனின் வாயில் இருந்து அடிக்கடி உதிரும் சொற்கள் சுடுவதைவிட இந்தச் சொற்கள் பாக்கியத்தை அதிகம் சுட்டுவிட்டன. பாக்கியத்தின் இமைகள் இன்னமும் வ...