தெய்வத்தின் நாக்கு
"இந்தக் கதய இதோட நிப்பாட்டினா எல்லாருக்கும் நல்லம். தாரதத் தீண்டுபோட்டு ஒரு மூலையில் கிடக்கவேணும். எனக்கு யாரும் படிப்பிக்க வெளிக்கிட வேணாம்" பாக்கியத்தின் முகத்தில் அடித்தபடி சொல்லிவிட்டு மோட்டார் வண்டியை உதைக்கத் தொடங்கினார் ராஜேந்திரன். வண்டியை இயக்க அவர் உதைத்த ஒவ்வொரு உதையையும் கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் முந்தய கணத்தில் மகனிடம் வாங்கிய பேச்சிலிருந்து இன்னமும் வெளிவரமுடியாமல் இருக்கும் தாய். சொற்கள் விழுந்த வேகமும் இப்போது உதை விழுகிற வேகமும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடாத்த முடிவெடுத்தால் காலின் விசை இயந்திரத்தை போய்ச் சேர முன்னர் பாக்கியத்தின் இதயத்தில் மகன் சொன்ன சொற்கள் குறைந்தது ஆயிரம் ஈட்டிகளையாவது இறக்கியிருக்கும். தன் மகனிடமிருந்து அவரை நோக்கி இத்தனை வெம்மையான சூடு சொற்கள் வந்தது இதுவே முதல் முறை. "அலாட்டாமல் கிடவுங்கோவன்", "வயசுபோன காலத்தில சும்மா கிடந்தால் நல்லம்" என்று ராஜேந்திரனின் வாயில் இருந்து அடிக்கடி உதிரும் சொற்கள் சுடுவதைவிட இந்தச் சொற்கள் பாக்கியத்தை அதிகம் சுட்டுவிட்டன. பாக்கியத்தின் இமைகள் இன்னமும் வெட்டவில்லை.
வயது போகப் போக ஒளி குன்றிப்போன மூதாட்டியின் கண்கள், அகல விரிந்து நிற்கிறது.
அகல
விரிந்த கண்கள் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் பிரதிபலிக்கின்றன என்கிற
சொற்களை, கடந்த கணத்தின் காட்சியில் பொறுத்திப் பார்த்தால், இப்போது, இது அச்சம்
என்றே எண்ணத் தோன்றுகிறது. பாக்கியம் மாலையை எண்ணி அச்சப்படுகிறார். மாலை
நிகழ்த்திக் காட்டக்கூடிய அந்தக் கொடுமையை, அந்தக் கொடுமையை தடுக்க அவர்
எடுத்த முயற்சியைத்தான் இந்தச் சொற்கள் முறித்துப் போட்டிருக்கின்றன என்கிற
அச்சம் தான் கண்கள் வழி தெரிகின்றது.
நிதானமிழந்த சொற்களும் ஒளியிழந்த கண்களும் சந்திக்கவே கூடாதா எதிராளிகள்.
நிதானம்
இழந்திருந்த ராஜேந்திரனை, இத்தனை தடவை உதைத்தும் இயங்கத்தொடங்காத மோட்டார்
வண்டி மேலும் நிதானம் இழக்கவைத்தது. மீண்டும் மீண்டும் உதைக்கிறார். அது
அப்படியே இருக்கிறது. அது அவருடைய மகளது வண்டி என்பது கோவம் மேலும்
அதிகரிக்க காரணமாகிப்போனது.
"இந்தக் கருமத்த ஒழுங்கா திருத்திப்
பாவிக்கக் கூட அவக்கு தெரியாது... ஆனா யாரக் கலியாணங்க கட்டவேணும் எண்டு
அவவுக்குத் தெரியுமாம்" வீட்டினுள்ளே காதைப் பொத்திக் கொண்டிருக்கும்
மகளுக்கு அது கேட்காது என அவருக்கு தெரியாததால் சத்தமாகக் கத்தினார்.
காதைப் பொத்தாமல் இருந்த மனைவி வெளியே வந்தார்.
ஐந்தாவது உதைக்கும்
எருமை மாட்டைப் போல அசையாது கிடந்த வண்டியை இன்னும் வேகமாக ஆறாவது உதை
உதைக்கையில் அவரது செருப்பு உதைப்பானில் இருந்து சறுக்கியது. "சராக்..."
என்கிற சத்தம். உதைப்பான் ராஜேந்திரனின் காட்சட்டையில் கிழியலை போட்டுப்
பழிதீர்த்தது.
"மனுசன் வெளிய போகேக்க இழுத்துப் பிடிச்சு
தேவையில்லாத கதைகள் கதைக்கவேணாம் எண்டு எத்தனை தடவ சொல்லியிக்கன்" என்று
பாக்கியத்தை கடிந்தபடி ராஜேந்திரனை நோக்கி வந்தார் அவரது மனைவி.
"வேற
களுசான் அயன் பண்ணிக் கிடக்கே" அவர் கேட்டு முடிக்க முதல் "அப்பாட மற்றக்
களுசான ஒருக்கா அயன்பண்ணு பாப்பம்" என்று மகளை விழித்தார் மனைவி.
மகளின்
காதுகள் இன்னமும் அவளது விரலால் அடைபட்டுக் கிடக்கிறது. தன்னுடைய
அப்பம்மாவின் தளர்ந்த குரலைத் தவிர வேறு குரல்களால் அந்த விரல்களை அசைக்க
முடியவில்லை.
சொற்களால் குத்துண்ட பாக்கியத்தின் கண்கள் இப்போது
இறுக மூடிக் கொண்டது. அடுத்த கணங்களில் என்ன நடக்கப் போகிறது என
தெரிந்துகொள்ள அவர் விரும்பவில்லை. வீட்டிலிருந்து வந்த எல்லா ஒலிகளையும்,
இரைச்சல்கள் எனச் சொல்லி அவரது காதுகள் புறக்கணித்தன. நிமிடங்கள் தாண்டி
அவர் கண்களையும் காதுகளையும் திறந்தார். கண்ணீரும் அமைதியும்
ஒட்டியிருந்தது.
***
"உண்ற பெட்டைக்கு அந்த நாயன் மருந்து
செஞ்சு வச்சிருக்கான், அதுதான் நிண்டு இந்த ஆட்டம் ஆடுறாள், அவன முறிச்சால்
எல்லாம் சரிவரும்" பாக்கியத்தின் பாட்டி பாக்கியத்தின் தந்தைக்கு
சொன்னதைக் கேட்ட மாத்திரத்திலேயே, பாக்கியம் தன்னுடைய இரு ஆட்காட்டி
விரல்களையும் இரு காதுத் துவாரங்களுக்குள்ளும் வைத்து காதுகளை அழுத்தி
மூடினாள்.
இந்தக் கணத்தில் தான் சொல்லக்கூடிய எந்த வார்த்தைக்கும்
பொருள் இல்லை என அவள் உணர்ந்து கொண்டதன் வெளிப்பாடு அது. தன்னால் பதிலளிக்க
முடியாத சொற்களைக் காவிவரும் காற்றுக்கு காதுக்குள் இடமில்லை என்கிற சிறு
அமைதிப் போராட்டம்.
ஒரு காதலின் மீது இத்தனை வெறுப்பினை உமிழும்
மனிதர்கள் பாக்கியத்தின் தந்தையின் அருகிலும் முன்னாலும் அமர்ந்து பேசிக்
கொண்டிருக்கிறார்கள்.
சாதி, பணம் இந்த இரண்டு சொற்களும் நீண்ட
நேரம் அலசுப்பட்ட பின்னர், இறுதியாக என்ன செய்வது என்ற கேள்வியை ஆராயத்
தொடங்கினார்கள் அந்த மனிதர்கள். இரண்டு சொற்கள் விழுந்தன. "திருமணம்",
"பூசாரி".
பாக்கியத்தின் காதலன் உண்மையிலேயே மந்திரவாதி ஒருவனை
வைத்து செய்வினை செய்து எதையோ ஏவி அவளை வசப்படுத்தியிருக்கிறான் என்பதை
பாக்கியத்தின் குடும்பம் நம்பியது. எப்பாடு பட்டாவது தங்களது பிள்ளையை
அதிலிருந்து மீட்டுத் தங்களது குடும்பத்தின் பெயர் கெட்டுவிடாமல் காப்பாற்ற
அவர்கள் திண்ணம் கொண்டார்கள்.
அந்த இரண்டு சொற்களில் பூசாரி
என்கிற சொல்லுக்கு உடனடி முக்கியத்துவமும், அது வெற்றிகண்ட அடுத்த
நொடியிலேயே திருமணத்தை ஏற்பாடு செய்வதும் என முடிவாகியது.
அடுத்த நிமிடமே குளத்தடி முனியப்பர் கோயில் பூசாரி வீட்டிற்கு ஆள் போய்ப் பதிலோடு வந்தான்.
நாளைக்கு வருகிறேன் என அவர் சொல்லியனுப்பியதை ஒட்டி பல கதைகள் எழுந்தன.
"உவன்
ஒரு சதத்துக்கு உதவாத பூசாரி. உவன நம்பிக் கொண்டு இருக்கிறதே. நாளைக்கு
எண்டு சொன்னான் எண்டால் நாலு நாள் கழிச்சுத்தான் வருவான்." வட்டமாய்
அமர்ந்திருந்த அறுவரில் ஒருவர் தொடங்கினார்.
அப்படியே ஒருவர் மாறி ஒருவர் சொல்லிக்கொண்டே போனார்கள்.
"மணியத்திட
மனிசிக்கு பேய் பிடிச்சிட்டு எண்டு, இவனக் கூப்பிட்டால் நாளைக்கு வாரன்
எண்டவன். இவன் வாரதுக்கிடையில அது கொழுத்திக் கொண்டு செத்திட்டு. இவன நம்பி
காத்திருந்தால் கஸ்டம்தான் சொல்லிப்போட்டன்"
"அவன் மணியமே கொழுத்தி விட்டிருப்பான். நம்ப ஏலாது." வட்டத்தில் இருந்த இன்னொரு குரல் மறுத்தும் பேசியது.
"ஆள்
முந்தின மாதிரி இல்லை எண்டு ஒரு கத, ஆளிண்ட மந்திரங்கள் இப்ப பேசுரதில்லப்
போல. பொன்னாச்சிட மகனின்ட கடைசிக்கு திருநீறு போட்டு ஒண்டுமில்லை எண்டு
சொல்லி ஒரு கிழமையில்லை, அது பக்கத்து ஊர்க்காரனோட ஓடிப் போயிட்டுது.
பிறகு பாத்தால் அவன் யாரோ பூசாரிட மகனாம், அவனும் மந்திரமெல்லாம்
படிச்சவனாம், இவர்ட மந்திரம் அவனிட்ட பலிக்கல்ல போல."
பாக்கியத்திற்கு திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது அலசி ஆராயப் போவதை விட பூசாரி தேடும் போது ஆராய்ந்தார்கள்.
பாக்கியம்
இன்னமும் காதை அடைத்தபடிதான் குறுகி அமர்ந்திருந்தாள். வெளியே கதைத்துக்
கொண்டிருந்தவர்கள் காற்றில் கரைத்துவிட்ட சொற்கள் முழுவதுமாகக்
காணாமற்போகமுன்னர் விரலுக்கும் காதுக்கும் இடையில் இருந்த மயிரிடை அளவிலான
இடைவெளிக்குள்ளால் கடத்திச் சென்றது பாழாய்ப் போன காற்று. காதை மேலும்
அடைக்க முயற்சித்தாள். காற்றுக்கே தொடர் வெற்றி.
தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற தாய் மீண்டும் வெளியே வந்தார்.
"அவளப் பாருங்க ஒருக்கா, பைத்தியம் பிடிச்ச மாதிரி காதைப் பொத்திக் கொண்டு இருக்காள். என்ன எண்டு கேளுங்கோ வந்து."
"அது
அவளில்ல, உள்ளுக்க இருக்கது செய்யுது, மந்திரம், கடவுள் பூசாரி எண்டு
சொன்னா அது பயப்பிடத்தானே செய்யும். நாளைக்கு மந்திரிச்சா எல்லாம்
சரியாகும்." பாக்கியத்திற்கு மந்திரம் செய்துதான் அவளை காதலில் விழ
வைத்திருப்பான் என்ற சிந்தனையை முதலில் உதிர்த்தவர் சொன்னார்.
இரண்டு
பேர் மட்டும் சாளரத்தினூடாக எட்டிப் பார்த்தனர். இவர்கள் பார்க்கின்ற
கணத்திற்கு முந்தைய கணம் காற்றில் கரைந்த சொற்கள் பாக்கியத்தின் காதுகளை
எட்டியிருந்தது. நிச்சயம் தன்னைப் பார்க்க யாராவது வருவார்கள் என
காதிலிருந்து கைகளை எடுக்காமலே மெல்ல நிமிர்ந்து வாசலைப் பார்த்தாள்.
யாரும் வரவில்லை. அப்படியே இடப்பக்கம் திரும்பி சாளரத்தை அவள் பார்க்கவும்,
இவர்கள் எட்டிப் பார்க்கவும் சரியாக இருந்தது. சடார் என மீளக் குனிந்து
அமர்ந்தாள்.
"நாங்கள் பாக்கப் போறம் எண்டு அதுக்கு தெரிஞ்சிட்டு. சடக்கெண்டு பாத்திச்சுது, எனக்கு நடுங்கிட்டு" ஒருவர் சொல்ல...
"அந்தப் பார்வையில அப்பிடி ஒரு உக்கிரமடாப்பா" மற்றவர் ஆமோதித்தார்.
பாக்கியத்தின்
கண்களில் கண்ணீர். அவள் அதுவாக மாற்றப்பட்டிருப்பதை, அவள் எப்படி
உள்வாங்கிக் கொண்டாள் என்பதுதான் அந்தத் துளிகள் சொல்லும் செய்தி. அவள்
தன்னுடைய காதலனிடம் தானும் காதலிப்பதாக உறுதிப்படுத்தியலிருந்து இன்றுவரை
கடந்துவந்த இரண்டு வருடத்தின் நீளத்தைவிடவும் கடந்துகொண்டிருக்கும் இந்த
மணிக்கூற்றின் நீளம் அவளுக்கு அதிகமாகத் தெரிந்தது.
வீட்டிலே
தாயுடனோ தந்தையுடனோ சண்டையிடுகிற எல்லா சமயங்களிலும் அவள் காதுகளை உடனே
மூடிக் கொள்வாள். தந்தை பேசும் வசைகளை கேட்கக்கூடாது என்பதற்காக அது.
அடிப்பதைக் கூட பொறுத்துக் கொள்கிற பாக்கியத்திற்கு வசைகளைக் கேட்கவே
முடியாது. அனிச்சை போல மெல்லிய மனம் அவளது.
வெளியே இருப்பவர்களது
வாய்கள் ஓய்வெடுப்பதாய் இல்லை. இந்தக் கொடுமைக்காரக் காற்றாவது தனது
கைகளின் போராட்டத்துக்கு மதிப்பளித்து காதுக்குள் புகாமல் திருப்பிப்
போகக்கூடாதா? பாக்கியத்தின் நெஞ்சம் படபடத்தது.
"எண்ட மனுசிட ஊர்ப்
பக்கத்தில ஒரு திறமான ஆள் இருக்கெண்டு அடிக்கடி சொல்லுறவள். கனதூரத்தில
இருந்து கூட கார் பிடிச்சு ஆக்கள் வாரவையாம். ஆளிண்ட மந்திரம் நிண்டு
பேசுமாம். வேதக்காரர், முஸ்லிம் எண்டு எல்லா சனமும் வாராதாம். அண்ணை, நீ
நாளைக்கு காலைல பாரு அவன் பூசாரி வந்து சொல்லுறது சரியாப் படயில்லை எண்டால்
சொல்லு. கார் ஒண்டு பிடிச்சுக் கொண்டு ஒருக்கா போய்ட்டு வருவம். இது
பிள்ளையிட வாழ்க்கை, விளையாட்டா இருக்காத" என்று சொல்லியபடியே ஒருவர்
எழுந்து போனார்.
காற்றில் வந்த ஒலியின் அளவு கொஞ்ச கொஞ்சமாய் குறைந்தது.
***
ராஜேந்திரனின்
தொலைபேசியில் அழைப்பு வந்தது. பழுது பார்ப்பதற்காக கொடுக்கப்பட்ட
மகிழுந்தின் திருத்தவேலைகள் முடிந்திருப்பதாக சொன்னார் மறுமுனைக்காரர்.
நாளைய தினம் தருவதாகவே அவன் முதலில் சொல்லியிருந்தான். வழமையாக சொன்ன
நாட்களை விடப் பிந்தியே வாகனங்களைத் திருத்திக் கொடுப்பவன் இன்று முந்தித்
தருகிறானே என்றெல்லாம் சிந்திக்க ராஜேந்திரனுக்கு சிந்தனை வரவில்லை.
"பின்னேரம்
கார் கொண்டு வரத்தேவையில்லை எண்டு உண்ட தம்பியிட்ட சொல்லு, எண்ட கார்லயே
போவம் எதுக்கு தேவையில்லாம அவன அலைக்கழிப்பான்." மனைவியிடம் சொன்னார்.
"இன்னுமா அயன் பண்ணுபடுது. ஒரு வேலை செய்ய இவளவு நேரமா?" என அடுத்த நொடியே கடுகடுத்தார்.
எதுவும் பேசாமல் காட்சட்டையை கொண்டுவந்து கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றாள் மகள்.
காட்சட்டையை
மாற்றிக்கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளை உதைத்தார். ஏற்கனவே உதைத்த
உதைகளில் உள்ளேயிருந்த பற்சில்லுகள் பாதி இயங்கியபடி தயாராக இருந்ததால்
இம்முறை ஓரிரு உதையில் பயணத்திற்குத் தயாரானது.
"பின்னேரம் நான்
வரேக்க ரெண்டு பேரும் வெளிக்கிட்டு நிக்கவேணும், வந்தபிறகு அது இது எண்டு
யாரும் எண்ட வாயப் பிடுங்கக் கூடாது. விளங்குதே?" கடந்த இருபது
வருடங்களுக்கு மேலாக கட்டளைகளையிட்டுப் பழக்கப்பட்ட ராஜேந்திரன் அடுத்த
கட்டளையிட்டபடி மோட்டார் வண்டியை முறுக்கினார்.
வாசற் கதவைப்
பூட்டிவிட்டு உள்ளே வந்த ராஜேந்திரனின் மனைவி, முன் விறாந்தையைக்
கடக்கையில், "அவர் கடைசியா சொன்னது உங்களுக்குத்தான். பின்னேரம் நாங்க
மூண்டு பெரும் வெளிக்கிடேக்க வாசலிலவச்சு தேவையில்லாத கதைகள் எதையும்
கதைச்சு அவரிட்ட ஏச்சு வாங்காதீங்கோ, மனிசன் இவளாள கொதியில இருக்கு.
நீங்களும் சேந்து கொதியக் கூட்டவேணாம்." சொல்லிச் சென்றார்.
நிமிடத்துக்கு
நிமிடம் மாறும் உலகென்று ஆயிரம் சொல்லிக் கொண்டாலும் இந்த உலகம்
அப்படியொன்றும் பெரிதாக மாறிவிடவில்லை என ஒரு என்பது வயது மூதாட்டி
நினைப்பதில் குறைந்தபட்ச நியாயமாவது இருக்கவே செய்கிறது. கண்களை மூடும்போது
வந்து போகும், வாழ்வில் இனி எப்போதுமே நினைவுக்கே வந்துவிடக்கூடாதென தான்
சிறையிட்டிருந்த காட்சிகளுக்கும், கண்கள் திறந்திருக்கும் போது இங்கே
நடக்கும் காட்சிகளுக்கும் வித்தியாசங்களை கண்டு கொள்ள முடியவில்லை
பாக்கியத்திற்கு.
தன் வாழ்நாளில், காட்சிகளும் ஆண்டுகளும்
மனிதர்களும் மாறுவதைத்தவிர மிச்சமெல்லாம் உறைந்து போய்க்கிடப்பது போல
அவருக்குப் பட்டது. இந்தப் பூமி உருளும் கோளமல்ல, துருப்பிடித்து அசையாது
பிணைந்து கிடக்கும் இரு பற்சில்லுக்களில் ஒரு பற்சில்லு. அசையாது இருக்கிற
பொழுதிலும்கூட தன்னுடைய துருப்பிடித்த கூரிய முனைகளால் மனிதர்களை அது கீறி,
இரத்தம் கண்டு ரசிக்கிறது. வடிந்த இரத்தம் கறையாய்ப் படிந்து
உருப்பெருத்துக் கிடக்கிறது. கீறப்பட்ட மனிதர்கள் காலத்துக்கும் தங்கள்
வடுக்களைச் சுமக்கிறார்கள்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்
பாக்கியத்திற்கு காதல் வந்தது. மந்திரமும் பூசாரியும் பேயோட்டாலும்
திருமணமும் எனக் காட்சிகள் அரங்கேரின. இப்போது பாக்கியத்தின் பேத்தி.
மந்திரம் தான் செய்திருக்கிறான் என்ற முடிவுக்கு உறவுகள் எல்லாம் நேற்றே
வந்துவிட்டன. இன்று மாலை பூசாரியிடம் செல்லுதல் என அதே வரிசையில்
காட்சிகள் நகர்கின்றன.
இரண்டு கதைகளிலும் இருக்கும் மாற்றமும்
ஒற்றை ஆறுதலும், அப்போது பாக்கியத்திற்கு கிட்டாத பாக்கியம், இப்போது
பாக்கியத்தின் பேத்திக்கு பாக்கியத்தின் வடிவில் கிட்டியிருக்கிறது.
காதலுக்கு காதல் என்ற அங்கீகாரத்தை வழங்க ஒரு உறவு. தனது பேத்தியின்
காதலுக்கு வழங்கவேண்டிய கண்ணியத்தை பாக்கியத்தால் மாத்திரமே வழங்க
முடிந்திருக்கிறது.
தன்னுடைய பிள்ளை எடுத்த முடிவை
முட்டாள்த்தனமானது என்பதற்கும், யாரோ ஏவி விட்ட ஏதோ ஒன்று அவளை அந்த முடிவை
எடுக்க வைத்திருக்கிறது என்பதற்கும் இடையில் தனது பிள்ளையை ஒரு மனுசியாக
மதிக்கிறேனா இல்லையா என்கிற ஒரு பெரும் இடைவெளி இருப்பதை காணுகிற போதுதான்
பாக்கியத்தின் மனம் பதை பதைக்கிறது.
***
"மாமா கார்
கொண்டுவரப் போய்ட்டார், கார் இப்ப வந்திடும் வெளிக்கிடு பாப்பம்"
பாக்கியத்தின் அம்மா உறங்கிக் கிடந்த பாக்கியத்தை எழுப்பினார்.
முனியப்பர்
கோவில் பூசாரி வந்து வீட்டைச் சுற்றிப் பார்த்து, வீட்டிலிருப்பவர்கள்
ஒவ்வொருவரையும் அழைத்து தலையில் தேசிக்காய் வைத்துப் பார்த்து, யாருக்கும்
எதுவுமில்லை எனச் சொல்லி வந்ததற்காக எல்லோருக்கும் திருநீறு போட்டுவிட்டுப்
போனார்.
முனியப்பர் கோவில் பூசாரியை வைத்து எடுக்கும் முயற்சியில்
தாங்கள் கதைத்துக் கொண்டதை போல ஒரு முடிவு வராவிட்டால் என்ன செய்வது என
யோசித்திருந்தார்களோ, அதையே இப்போது செய்யப் போகிறார்கள். கனதூரம் கடந்து,
இதுவரை கண்ணில் காணாத, காதால் கேட்காத ஒரு பூசாரியை நம்பிப் போகப்
போகிறார்கள். அதற்குத்தான் மகிழுந்து வந்து கொண்டிருக்கிறது.
இவர்கள்
கடவுளையும் மந்திரத்தையும் பேய்களையும் நம்புகிறார்களா அல்லது அவற்றைப்
பற்றி தாங்கள் எடுத்திருக்கும் முன்முடிவுகளை நம்புகிறார்களா? இந்தக்
கேள்விக்கு தங்களது முன்முடிவுகளை நம்புகிறார்கள் என்பதுதான் பதிலாக்கிப்
போகிறது. அதுதான் இவர்களின் வாழ்வின் சோகம் இல்லையா?
மகிழுந்து,
புதிய பூசாரியின் வீட்டின் வாசலில் போய் நிற்கிறது. அவரது வீட்டு வாசலும்
அவர் பூசை செய்யும் காளி கோயிலின் வாசலும் சரி நேரானவை.
அந்த சிறிய
கோயிலின் சூழமைவு அந்தக் கோயில் பேயோட்டுதலுக்கேயானது என எல்லோர் மனதிலும்
சித்திரத்தை வரைய வல்லதாயிருந்தது. உடுக்கை அடிக்க அங்கே இன்னொரு
பெண்ணிற்கு பேய்யோட்டிக் கொண்டிருந்தார்கள். பெண்ணல்ல அது ஒரு முஸ்லிம்
சிறுமி, எப்படியும் பதினைந்து அல்லது பதினாறுதான் வயதிருக்கும். பூசாரியின்
முன்னால் மிகுந்த பிராயத்தனப்பட்டு அவளை இருக்க வைத்திருக்கிறார்கள். ஒரு
சிறுமியைப் பிடிக்க இரண்டு நன்கு வளர்ந்த ஆண்கள் தேவைப்படுவதைப்
பாக்கியத்தின் தாயும் தந்தையும் மருண்ட கண்களோடு பார்த்தனர்.
அவர்களது மனதுக்குள் இப்போது ஒரு நம்பிக்கை, தங்களது பிள்ளையை தாங்கள் மீட்டு விடுவோம் என நம்பினார்கள்.
பாக்கியத்திற்கு நடப்பவை என்னவென்று புரியாத நிலை. அதனாலேயே அவள் எல்லாவற்றையும் உற்றுக் கவனிக்கத் தொடங்கினாள்.
இரண்டு
பேர் இறுக்கிப் பிடித்திருப்பதையும் தாண்டி திமிருகின்ற அந்தச் சிறுமியை
இப்போது மூன்று பேர் பிடித்தார்கள். தன்னை விடச் சொல்லிக் கத்திக்
கொண்டிருந்த அவளை நோக்கியவாறே வைத்த கண் வாங்காமல் மந்திரங்களை
உச்சரித்தார் பூசாரி. ஒவ்வொருமுறை மந்திரம் முடிந்ததும் உள்ளேயிருப்பதை
விழிப்பதாய் வசை மொழிந்தார் அவர். சாதாரணமாய் தனது மகளை யாரும் கடிந்து
பேசினாலே பொறுத்துக் கொள்ளமுடியாத சிறுமியின் பெற்றோர் பூசாரிக்கு சற்று
அருகில் அமர்ந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
சிறுமி
எரிச்சலுடன் கத்தினாள். தொடர்ந்து கத்தினாள். அவள் சிறுமி, அவளிடம் எத்தனை
பலமிருந்துவிடப் போகிறது. அவளது குரலடைத்து, அழுகை வெடித்தது. அவளிடம்
இப்போது திமிருவதற்கான பலம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து மயங்கிப்
போனாள்.
சிறுமியின் நெற்றியில் திருநீறு போட்டவாரே அவளின்
பெற்றோருக்கு ஏதோ சொன்னார் பூசாரி. தாயாரின் கண்களில் கண்ணீர்
மல்கியிருந்தது. நன்றியைச் சொல்கிறவர் போல எல்லா உடல் மொழியும் தெரிந்தது.
தந்தை சிறுமியைத் தூக்கி நடந்தார்.
பாக்கியம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாக்கியத்தின்
குடும்பத்திற்கு முன்னர் காத்திருந்த ஒவ்வொரு குடும்பங்களாய் பூசாரியின்
முன்னால் சென்று அமர்ந்து பின் அங்கிருந்து அகன்றனர். எல்லாம் பேயோட்டல்கள்
அல்ல. வீட்டிற்கு காவல் செய்ய அழைக்கச் சிலர், வீட்டை வந்து பார்த்து
தங்களுக்கு வைக்கப்பட்ட செய்வினைகளை எடுத்துவிடுமாறு கேட்க வந்த சிலர்,
தெய்வத்திடம் வாக்குக் கேட்க வந்த சிலர். இப்படி பலதரப்பட்ட மக்கள் அங்கே
வந்து போயிருந்தார்கள்.
எல்லாச் சொற்களும் காதுகளுக்கு தெளிவாகக்
கேட்காத போதும் எல்லாச் செயல்களும் நன்றாகத் தெரிந்தன. அந்தக் கோயிலின்
காற்றை அசைத்துக் கொண்டிருந்த உடுக்கை, அவ்வப்போது வெட்டியெறியப்பட்ட
தேசிக்காய்கள், காளியின் நாக்கைப் போல நீண்டிருந்த பூசாரியின் சிவந்த
நாக்கு, சிலரின் சதைகளைக் கிள்ளிப்பார்த்த சவுக்கு எல்லாவற்றையும்
பாக்கியம் நன்கு கவனித்தாள்.
இப்போது பாக்கியத்தின் முறை, நின்று
கொண்டிருந்த பாக்கியத்தை இருமுறை ஏற இறங்கப் பார்த்தார் பூசாரி. அவரை பிரதி
பண்ணியதைப் போன்ற பார்வையைத்தான் உதவியாளர்களும் வீசினார்கள்.
உதவியாளர்களில்
ஒருவன் பாக்கியத்தைப் பார்த்து சிரித்தான். அவனது பார்வை அவளுக்குப்
பிடிக்கவில்லை. பூசாரியை நோக்கித் திருப்பினாள். பாக்கியத்தின்
பெற்றோருக்கு இந்தப் பூசாரியை பற்றிச் சொன்ன உறவுக்காரர் மெல்ல நடந்து
பூசாரியின் அருகே சென்று காதில் ஏதோ ஓதினார்.
கண்களை மூடிக்
கேட்டுக் கொண்டிருந்த பூசாரி பாக்கியத்தை நோக்கி கைகளை உயர்த்தி, தன்
முன்னே வருமாறு அழைக்கும் வகையில் சைகை செய்தார். ஏற்கனவே நடந்தவற்றை
பார்த்திருந்தவளுக்கு சிறு அச்சமும் குழப்பமும் வேர் விட்டிருந்தது.
அவளுடைய மூளை தான் பார்த்த அத்தனையும் அடுத்து தனக்கு நடக்கப் போகிறது என
சிந்திக்கத் தொடங்கியது. பூசாரியின் கட்டளைக்கும், அதற்கான பாக்கியத்தின்
தூண்டலுக்கும் இடையிலான நேர இடைவெளியை அவளது சிந்தனை அதிகமாக்கியது.
தூண்டலுக்கான துலங்களை ஆலோசிக்காமல், துலங்கினால் என்னவெல்லாம் நடக்கும் என
எண்ணம் போனது.
முனியப்பர் கோயில் பூசாரிபோல திருநீறு மட்டும்
போட்டு அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும். இரண்டு நாட்கள் சாப்பிடாமல்
இருக்கும் பாக்கியத்திற்கு தன்னையும் அவர்கள் அந்த சிறுமியை அழுதிப்
பிடித்தது போலப் பிடித்தால் தன்னால் தாங்க இயலுமா என்கிற கேள்வியும்
உருவானது. தன் காதலை சுற்றி நடக்கும் இந்த அபத்த நாடகங்கள் எப்போது
முடிவுக்கு வரும் எனவும் தோன்றியது. நொடிக்கு நொடி சிந்தனைகள் வளர்ந்து
கொண்டே போக, வேகமாய் சில சொற்கள் பாய்ந்து வரக் கேட்டாள்.
பாக்கியத்திற்கு
கோபத்தை வரவழைக்கவென்றே அந்தச் சொற்கள் பூசாரியின் வாயிலிருந்து சீடர்களை
நோக்கிப் பாய்ந்தது. காற்றுக்குதான் பேதமைகள் கிடையாதே அது தன்னிடம் வரும்
சொற்களை தன்னால் முடிந்த எல்லைவரை காவிச் செல்கையில், தான் தாண்டும்
காதுகள் இன்னாருடையது எனறு பார்த்து செய்திகளைச் சொல்லிப் போவதில்லை. அது
ஒன்றும் தபால்காரன் இல்லை யாருக்கு யாரால் என்று பார்த்து வேலை செய்ய. அது
ஒன்றும் எங்களுக்காக வேலை செய்யவும் இல்லை. சீடர்கள் காதுகளில் விழுத்திய
அதே சொற்களை பாக்கியத்தின் காதுகளிலும் விழுத்தியது.
"அந்தத் தேவடியாளை இழுத்துவந்து இங்க இருக்கவைங்கடா.."
தன்னுடைய
சொல்லுக்கு ஒருவர் செவி சாய்க்க சில கணங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளவே
பூசாரிக்கு இப்படிக் கோபம் வருகையில், அவருடைய அருவெறுப்பை தரும்
வார்த்தைகளை கேட்ட பாக்கியம் எப்படிக் கோபப்பட்டிருப்பாள். சின்ன
வயதிலிருந்தே வீட்டில் அவளுக்குத்தான் கோவக்காரி என்று பட்டம் வேறு
கொடுத்து வைத்திருந்தார்கள். இருபது வருடங்கள் கோவக்காரி, ரோசக்காரி
என்றெல்லாம் நாளுக்கு ஒரு தடவையாவது பட்டங்களை வாங்கியவள் தனக்கு
வழங்கப்பட்ட "தேவடியாள்" என்கிற பட்டத்தைக் கேட்டதும் முன் பாய்ந்தாள்.
"யாரையாடா தேவடியாள் எண்டு சொல்லுறாய் நாயே!"
பூசாரி கண்ணசைத்தார் இரண்டு சீடர்கள் வந்து அவளைப் பிடித்தார்கள். பாக்கியத்தைப் பார்த்து பல்லைக் காட்டியவன்தான் முந்தி வந்தான்.
ஒரு
வழியாக அந்த சிறுமியை அமரவைத்தபடியே, இவளையும் அமர வைத்தார்கள்.
சிறுமிக்கு நடந்த அத்தனையும் அதே போலவே நடந்தன. உடுக்கை அசைந்தது.
பூசாரியின் நாயக்கு நீண்டு வெளியே வந்து அச்சமூட்டியது. மந்திர ஒலி
கேட்டது. வசைச் சொற்கள் காதை சீண்டின. எல்லாம் முன்னர் நடந்தது போலவே.
முன்னர் பார்வையாளராய் இருந்தபோது உணராத சிலவற்றையும் பாக்கியம் உணர்ந்தாள்.
தன்னை
ஒரு நா வசைபாட, அதற்கு எதுவும் செய்யமுடியாமல், அசையவும் முடியாமல் தன்னை
நான்கு கைகளால் கட்டி வைத்திருக்கிறார்கள். அந்தக் கைகள் இரும்புச்
சங்கிலிகளாக தன்னை நசுக்குவது போல, ஒரு மலைப்பாம்பு தன்னை சுற்றி ஊர்ந்து
இறுக்குவது போல அவள் உணர்ந்தாள்.
தன்னை நிலத்தை நோக்கி அழுத்தும்
கைகளை, தன்னுடைய மூளை ஏன் ஒரு ஊரும் மலைப்பாம்பைப் போல பார்க்கிறது என
சிந்திக்க முதலே அவளுக்கு அது புரிய வந்தது. அந்த நான்கு கைகளில் ஒரு கை
பாக்கியத்தின் மார்பை நோக்கி அவளுடைய கையிற்கு இடையாக ஊர்ந்து வந்தது.
"பொறுக்கி நாயே! அறுவானே என்ன விடடா..." சத்தமாகக் கத்தினாள் பாக்கியம்.
அந்தக்
கை ஊர்ந்து வருகிற பக்கதிற்கு எதிர்ப் பக்கத்தில் இருக்கின்றபடியாலேயே
தங்களது பிள்ளைக்கு அரங்கேரிக்கொண்டிருக்கும் பாலியல் துஷ்பிரயோகத்தை உணராத
குடும்பத்திற்கு, பாக்கியத்தின் வார்த்தைகள், பேயினதோ பிசாசினதோ ஓலங்கள்
மாத்திரமே. ஒட்டப்படும் பேய்கள் கொடூரமாக அலறும் என்று அவர்கள் முன்னரே
கேட்டிருக்கிறார்கள்.
அந்தக் கை மார்பை முழுவதுமாகப்
பற்றியிருந்தது. பாக்கியம் திமிறிப் பாய முற்பட்டாள், பூசாரி கண்ணசைத்தார்.
மூன்றாமவன் பாய்ந்து வந்து பிடித்தான். ஏற்கனவே அவளைப் பிடித்திருக்கும் அந்த அறுவெருப்பானவனின் நீண்ட நாள் பங்காளியாக இவன் இருந்திருக்க வேண்டும். அவனது
ஒரு கை பாக்கியத்தின் பின் தலையில் வைக்கப்பட்டு அவளது முகத்தை நிலம்
நோக்கி தள்ள முற்பட்டது. மற்றக் கை முன்னமவனைப் போலவே சீண்டி அருவெறுக்க
வைத்தது.
பாக்கியம் இப்போது கெஞ்சி அழத்தொடங்கினாள்.
"ஆராவது என்ன காப்பத்துங்களன். ஆராவது கைய எடுக்க சொல்லுங்களன்..." அழுகைக்கு சளி வெளியே வந்து கொண்டிருந்தது.
ஆற்றாமையில் பேய் கெஞ்சத்தான் செய்யும் என்று யாரோ ஒருவன் சொன்னான்.
பாக்கியத்திடம்
இப்போது கத்தவும் திமிரவும் சக்தியில்லை. இன்னும் சில நொடிகளில் பாக்கியம்
மயங்கி விடுவாள். அவளது கண்கள் இப்போதே சொருகத் தொடங்கி விட்டன.
மந்திரங்களையும்
வசைகளையும் மொழிக்கின்ற பூசாரியின் நாக்கும், இந்த அருவெறுப்பான
மனிதர்களின் கைகளும் மாத்திரமே இயங்கிக் கொண்டிருந்தன.
பாக்கியத்திடம் இப்போது எந்த அசுமாற்றமும் இல்லை. அவள் மயங்கிவிட்டாள்.
மந்திரம் நின்றது. உடுக்கை நின்றது. எல்லோரும் கையெடுத்தார்கள்.
அமைதி.
பாக்கியம்
யாருமில்லா ஒரு வெள்ளை வெளியில் படுத்திருக்கிறாள். நீண்டு வெளியே
வந்திருந்த காளியின் நாக்கு, இப்போது இரண்டு சீடர்கள் வாயிலிருந்தும்
கழன்று விழுந்து அவளை நோக்கி ஊர்ந்து வருகின்றன. நாக்கில் படிந்திருந்து
வழியும் குருதித்துளிகள் உருவாக்கிய பாதையிலிருந்து அலறல் சத்தம் கேட்கக்
கேட்க, நாக்குகள் ரசித்து நடமாடுகின்றன. நாக்குகளின் அசைவைக் கண்டு நிலத்தில் சிந்தியிருந்த இரத்தத்துளிகள்
மேலும் அலரி அங்கிருந்து ஊர்ந்துபோகப் பார்க்கின்றன. பாக்கியத்தின் காலில்
அவை சரணாகதி அடைய, இப்போது பாக்கியமும்
அலறுகிறாள்.
மூளைக்குள் எதிரொலிக்கும் அவளது அலறல், மயங்கிய அவளைத்
தூக்கி செல்லும் அவளது தந்தைக்கு அனத்தல்தான். மயக்கத்தில் அனத்துகிறாள்
மகள்.
வீட்டிற்கு காவல் செய்ய வெள்ளிக்கிழமை பூசாரி வரப்போவதை
பேசிக்கொண்டே அவளைத் தூக்கியபடி, கோயில் படலையில் திருப்பி நிற்கும்
மகிழுந்தை நோக்கி நடக்கிறார்கள்.
பாக்கியம் அனத்திக் கொண்டே போகிறாள்.
***
ராஜேந்திரனின்
மகிழுந்து வீட்டு வாசலில் வந்து திரும்பி நின்றது. சத்தம் கேட்டு கண்களைத்
திறந்த பாக்கியம், எழுந்தார். அடுத்த தெருவில் இருக்கும் மகளின் வீட்டில்
இனிமேல் தங்கப் போவதை ராஜேந்திரனிடம் சொல்லாமலே அவனை கடந்து நடந்து
சென்றார். இந்த மாலை கழிந்து போக மீள வீடு திரும்பும் பேத்தியின் முகத்தை
பார்க்கக் காத்திருக்கும் மனவலிமை துவண்டுபோன மூதாட்டியிடம் இல்லை.
ராஜேந்திரனுக்கு விசாரிக்க எல்லாம் நேரமில்லை. அவரை பொறுத்தமட்டில் குடும்ப கௌரவத்தை காப்பாற்றவும் தன்னுடைய பிள்ளையின் வாழ்க்கையைக் காப்பாற்றவும் அவர் இப்போது ஓடவேண்டும்.
பாக்கியம் சற்றுத் தூரம் நடந்து திரும்பிப் பார்த்தார். அடுத்த திசையில் செல்லும் மகிழுந்தை விரட்டும் பாம்பு போலத் தெரிந்தது அந்தப் பாதை.
Comments
Post a Comment