Posts

பாதீடு 2025: IMF சிறைக்குள் அனுசரித்தலும் பொருந்திப்போதலும்

Image
    ஆங்கில மூலம்: அமாலி வெதகெதர ( Budget 2025: Adjusting and adapting inside IMF prison ) தமிழில்: அனோஜன் ஸ்ரெலாராணி திருக்கேதீஸ்வரநாதன் கடன்காரர்கள் கட்டிய சிறைக்குள் வாழ்க்கையை நடத்துவதில் கடன்பட்டவர்களுக்கு உள்ள சிரமத்தை சொல்லும் ஒரு கதை போலுள்ளது 2025ம் ஆண்டிற்கான பாதீடு. 2025 இன் அரச செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமுன்வரைவு, சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட நிதிசார் நெருக்குவாரங்களையும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதில் இருக்கும் இடர்பாடுகளையும் ஒருசேர படம்பிடித்துக் காட்டுகிறது. “பொருளாதார உறுதிப்பாட்டை கட்டிக்காத்தலும் கடன் மீள்செலுத்தலுக்கான நிலைபேற்றுத்தன்மையை மீட்டெடுப்பதும் இலங்கையின் பொருளாதாரத்தைச் செழிப்படையச் செய்ய முக்கியமாகிறது" எனச் சொன்ன சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு அறிக்கையின் வார்த்தை விளையாட்டுக்களில் இருந்த மட்டுப்பாடுகளையும் இந்தப் பாதீடு அம்பலப்படுத்துகிறது. பொருளாதாரத்தின் அடிப்பட்டைக் கட்டுமானங்களை மேம்படுத்தவும், தொழில்துறைகளை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பை சீர்செய்தலையும், திறன்களை வ...

மலையின் பெயர் என்ன?

வானம் சிவந்து கிடக்கிறது என நீ சொன்ன கணத்தில் நானும் வானம் பார்த்தேன், அடர் கருநீலத்தில் விரியும் சிறு ஒளியுடன் இருந்தது, நான் பார்த்த வானம்.   மலைமுகட்டின் உச்சியில் தெரியும் சின்னப் பூவை பார்க்கச் சொன்னேன். பூவை மறைத்து ஒரு இலை இருப்பதாய் சொன்னாய் நீ.   வடக்கிலிருந்து காற்று வீச அதை உன் மேற்குக் காற்று என்றாய் நீ. இடையில் மலை இருக்கிறது சொன்னாய் நீ.   மலையில் தெறித்து வண்ணம் மாற மலையின் உயரம் பார்வையை மாற்ற மலையில் பட்டு காற்றுத் திரும்ப இடையில் ஒரு மலையிருக்கிறது சொன்னாய் நீ   அப்படியே மலையின் பெயரைச் சொல்லிவிடு. அந்த மலையின் பெயர் என்ன?
என் உரையாடல்களில்  உன்னை நினைவுபடுத்தாத  சொல் ஒன்றைத் தேடுகிறேன்.   ஒன்றுகூடச் சிக்காத  சின்னமொழியா என்னுடையது?  
"கூண்டுக்குளே பிறந்த பறவைக்கு கனவில் வரும் வானமும் கம்பிகளால் வரிந்ததுதானோ..."
நினைவுகூர வருவார்கள். தூபியை உடைத்துவிடுங்கள். துண்டு துண்டாய் கிடக்கிறது.   தூபி இல்லை, அப்போதும் வருகிறார்கள். சட்டத்தின் முதுகில் சாட்டையடி. தடையுத்தரவு கொடுத்துவிட்டோம்.   தடை, இப்போதும் வருகிறார்கள். ஓடு... ஓடிப்போ, சாலையின் குறுக்கே தடுப்பு போடு. அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கேள். என்ன நடந்தாலும் பரவாயில்லை... நினைவுத் தீ எரியவே கூடாது. ஓடு... ஓடிப்போ...   என்ன தீ எரியவில்லைத்தானே... சொல்... வெற்றிதானே... வென்றோம் தானே...   ... ... ... ...   அத்தனை பயந்தவர்களா நீங்கள். உடைந்துபோய்க் கிடக்கும் எளிய மனிதர்களின் கண்ணீர்த் துளிகளுக்கே தொடை நடுங்குகிறீர்களே...

மழை

Image
குட்டிகள் ஈன்றிருந்த குழியில் இருந்து ஒவ்வொன்றாய்க் கவ்வி மேட்டுக்குச் செல்கிறது ஒரு நாய்   சரிந்து விழப் போகும் திட்டின் ஓரத்து வீட்டின் கூரைக்குள்ளே கட்டியிருந்த கூட்டில் வைத்திருக்கும் முட்டைகளை காவிச் செல்லமுடியாமல் பொறுமிக் கொண்டிருக்கிறது ஒரு புறா   காதில் இசைக் கொழுவியும் கையில் தேனீர்க் கோப்பையும் தரித்திருக்கும் எஜமானின் மடியில் படுத்திருக்கிறது ஒரு பூனை   உண்மைதான் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறாய்ப் பெய்கிறது மழை.

நீந்தத் தெரியாத கனவுகள்

Image
புத்தகப் பை அடுக்கத் தெரிந்தவர்களுக்கு நீந்தத் தெரியாததுதான் குற்றம் என்று தேவையற்றதை திறக்கும் விழாக்களில் அவர்கள் பேசக் கூடும்.   தாங்களே அதிக பாலங்கள் கட்டியதாகவும் சான்றாக அவர்களது வண்ணமய மாளிகைகளை நாங்கள்தான் சிறப்பாய் செய்தோம் என்கிற வார்த்தைகளோடு அவர்கள் காட்டக் கூடும்.   அவர்கள்தான் இவர்கள்தான் என இரண்டு பக்கங்களில் இருந்தும் கைகள் நீளக் கூடும்.   நாளைய அனர்த்தத்தை இன்றே தடுக்க நகரங்களின் மத்தியில் சில நீச்சல்குளங்களும் நீச்சல் வகுப்புகளும் உருவாகவும் கூடும்.   மக்களை அமைதியாக்க இறந்தவர்களுக்கான ஒரு புதிய தூபியை அவர்கள் முன்மொழிவார்கள் அது கட்டப்படப் போகும் விளையாட்டு மைதானத்தின் மூலையிலோ அல்லது கட்டிமுடித்த புது விகாரையின் புனிதத்தை குழைக்காது எல்லைக்கு வெளியேயோ எழுப்பப்பட்டு நீந்தத் தெரியாத கனவுகள் என பெயர் சூட்டப்படக் கூடும்.   மக்களைக் காத்தல் என்கிற ஒன்றைத் தவிர இந்த சபிக்கப்பட்ட தேசத்தில் எல்லாமும் நடக்கக் கூடும்.