செயற்கை நுண்ணறிவின் வேகமும் மனிதனின் வரம்புகளும்
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு பல திசைகளில் பயணித்தது. இறுதியில் செயற்கை நுண்ணறிவு பற்றி ஆழமாகப் பேசினோம். "செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இவ்வளவு வேகமாக வளர்கின்றன, பல துறைகளைப் புரட்டிப்போடுகின்றன. அப்படியென்றால், செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே மனித மூளையை விட ஆற்றலில் மிஞ்சிவிட்டதா?" என்ற கேள்வியை அவர் கேட்டார். பல ஆயிரம் மென்பொருளாளர்கள் சேர்ந்து பல வருடங்களாக உருவாக்கிய அடோபி நிறுவனத்தின் மென்பொருட்களை, ஒரு தனிநபர் செயற்கை நுண்ணறிவின் துணையோடு குறுகிய காலத்தில் உருவாக்கியிருப்பதே அவரது கேள்விக்கான காரணம் எனப் புரிந்தது.
செயற்கை நுண்ணறிவின் அண்மைக்கால வளர்ச்சி மெய்யாகவே பிரமிக்கத்தக்கது. ஏலவே பயன்பாட்டில் இருக்கும் மென்பொருட்களின் இடைமுகங்களையும் கருவிகளையும் பயன்படுத்தும் நிலையைச் செயற்கை நுண்ணறிவு முகவர்கள் எட்டியதிலிருந்து, அவற்றின் வினைத்திறன் ஒரு புதிய தளத்தை அடைந்திருக்கிறது. இருப்பினும் செயற்கை நுண்ணறிவு மனித மூளையின் ஆற்றலை இன்னமும் மிஞ்சவில்லை.
ஆனாலும் ஒரு செயற்கை நுண்ணறிவு முகவரால் மனிதனை விட வேகமாக நிரல் (program) எழுத முடிகிறது. உலகின் சிக்கலான கணிதப் புதிர்களையும் தீர்க்க முடிகிறது. புதிய புரத மாதிரிகளைக் கட்டமைத்து நோய்த்தடுப்பு மருந்து ஆய்வுகளின் வேகத்தை அதிகப்படுத்துகிறது. இது எப்படி?
காரணம் நிச்சயம் அறிவாற்றல் மேம்பாடு கிடையாது. இதை விளங்கிக்கொள்வதற்கு நாம் சில விடயங்களைப் பார்க்க வேண்டும்.
முதலாவது, மனிதனுக்குச் சில வரம்புகள் இருக்கின்றன. சீறாப்புராணத்தில், உலகின் வேகமான குதிரையை விவரிக்க, மனத்திடை எண்ணும் முன்னே விண்திசை பறக்கும் பாய்மா என்று பாடியிருப்பார் புலவர். நாம் அறிந்தவற்றில் எல்லாவற்றையும் விட வேகமான ஒன்றாகச் சிந்தனையின் வேகத்தை அவர் உருவகப்படுத்தியிருக்கிறார். மாபெரும் செயலொன்றுக்கான சிந்தனை மூளையில் பிறக்க ஒரு கணம் போதும். அதை ஏதோவொரு இடைமுகத்தினூடாகச் செயல் வடிவம் பெறச் செய்ய காலம் எடுக்கிறது.
2025-இல் Neuron இதழில் வெளியான "The Unbearable Slowness of Being: Why do we live at 10 bits/s?" ஆய்வின்படி, மனிதனின் நடத்தை சார்ந்த தகவல் செயலாக்க வேகம் ஏறத்தாழ வினாடிக்கு 10 bits மட்டுமே; ஆனால் நம் புலன்கள் வினாடிக்குச் சுமார் நூறு கோடி (10^9) bits தகவலைச் சேகரிக்கின்றன. நிமிடத்துக்கு 120 சொற்கள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்தாலும், அதன் தகவல் அளவு வினாடிக்குச் சுமார் 10 bits தான். இந்தத் தடை கைகளில் மட்டும் இல்லை; ஆய்வாளர்கள் மூளையின் மையச் செயலாக்கமே ஒரு நேரத்தில் மிகக் குறைந்த தகவலை மட்டுமே கையாளும் குறுகிய வழி என்று கருதுகின்றனர். "சிந்தனை ஒரு கணத்தில் பிறக்கிறது" என்ற என் உருவகத்தை இது சற்றுச் சிக்கலாக்குகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனாலும் முடிவு மாறுவதில்லை: மனிதன் வெளிப்படுத்தக்கூடிய வேகம் மிகக் குறைவு. அந்தக் குறுகிய வழியின் வழியாகவே செல்ல வேண்டும் என்ற கட்டாயம் செயற்கை நுண்ணறிவுக்கில்லை.
நிரலாக்கத்தையே எடுத்துக்கொள்வோம். ஒரு பொறியாளரது சிந்தனையின் வேகத்துக்குக் கையின் வேகம் ஈடு கொடுப்பதில்லை. உண்மையில் ஒரு மென்பொருள் பொறியாளரின் வேலை தட்டச்சு செய்வதல்ல. அதற்கான மாற்றுத் தெரிவு இல்லாததாலேயே இத்தனை காலமும் அவர்கள் வினைத்திறன் இல்லாத தட்டச்சு வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது. தட்டச்சு செய்யும் வேலையைச் செயற்கை நுண்ணறிவு முகவர்கள் பொறுப்பெடுக்கத் தொடங்கிய காலத்திலிருந்து மென்பொருள் பொறியாளர்களது வேகம் பல மடங்காக அதிகரித்ததுகப் பலர் கூறுகின்றனர். பின்னர் மென்பொருள் திட்டமிடலிலும் அவை மேம்பட்டதால் மென்பொருள் உற்பத்தி அசுர வேகத்தில் நடக்கிறது.
இரண்டாவது, இடைமுகம் மட்டுமே இதன் முழுக் காரணம் அல்ல. செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மனிதர்கள் தொகுத்து வைத்திருக்கும் பெருமளவு தரவுகளில் பயிற்சி பெறுகின்றன; அவற்றுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான சிறப்புச் செயலிகளைக் கொண்ட தரவு மையங்களின் மாபெரும் கணிப்புத்திறனும் (processing power) இருக்கிறது; சில துறைகளில் சாத்தியமான தீர்வுகளை வலிந்து சோதித்துப் பார்க்கும் அளவின் வலிமையும் (brute force) பங்கு வகிக்கிறது.
அண்மையில் OpenAI நிறுவனத்தின் புதிய மாதிரியைப் பயன்படுத்திச் செயற்கை நுண்ணறிவு முகவர்த் திரள் ஒன்று, Hugging Face நிறுவனக் கட்டமைப்பை ஊடுருவியது. இதில் 700-க்கு மேற்பட்ட முகவர்கள் இணைந்து செயற்பட்டன. இதைச் சாத்தியமாக்கியதில் முக்கியமான கூறு அந்தச் சோதனைக் கட்டமைப்புக்கு இருந்த கணிப்புத்திறன். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட முகவர்கள் உருவாகத் தேவையான வலு அந்தக் கட்டமைப்பில் இருந்தது. செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பால் பிரயோகிக்கக்கூடிய வலு மனிதனால் வழங்கக்கூடியதைக் காட்டிலும் மிக அதிகம். தவிரவும் மனிதர்களுக்கு வரும் களைப்பும் சோர்வும் அதற்கு இல்லை. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தாத ஒரு மனிதனை விடச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மனிதன் இவற்றினாலேயே வினைத்திறன் மிக்கவனாகிறான். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதனுக்கு இருக்கும் வரம்புகளைத் தாண்டிச் செயலாற்ற வைக்கிறது.
ஆனால் கை என்பது மனிதன் உலகத்துடன் உறவாடும் ஒரே இடைமுகம் அல்ல. இன்னொரு மனிதனுடன் உரையாடுவதற்கு நாம் பயன்படுத்தும் இடைமுகம் மொழி. கைகளின் தடையைச் செயற்கை நுண்ணறிவு நீக்கிவிட்டால், சொற்களின் தடைக்கு என்ன ஆகும்? அதன் இழப்புகளையும் எல்லைகளையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Comments
Post a Comment