Posts

Showing posts from July, 2019

ஆனாலும் ஜூலை கருப்புத்தான்

Image
நீங்கள் எத்தனை முறையும் வெள்ளையடிக்க முயற்சிக்கலாம். வீட்டுக்கு வண்ணம் பூசுவது போல ஒரு கோடு இரண்டு கோடு மூன்று கோடு ஏன் நான்கு கோடுகள் கூட பூசலாம். உங்கள் நீண்ட யானைக் கையால் பெரிய தூரிகை பிடித்து விரும்பிய அளவு மையிட்டு திரும்பத் திரும்பப் பூசலாம். ஆனாலும் ஜூலை கருப்புதான். மேகங்கள் அல்ல  ஆயிரம் புகைகள் அடர்ந்து திரண்டு நிலவை மறைத்துக் கருக்கிய ஜூலை. ஒரு புகை, ஒரு உயிர், ஒரு கனவு ஆயிரம் புகைகள்,  ஆயிரம் உயிர்கள், ஆயிரம் கனவுகள் சாலையின் தார் அல்ல தாரிற்கும் கீழே ஊடுருவிய குருதியில் நிலம் சிவந்து பின்பு கறுத்த ஜூலை ஒரு வாள்வீச்சு, ஒரு உயிர், ஒரு கனவு ஆயிரம் வாள்வீச்சுக்கள், ஆயிரம் உயிர்கள், ஆயிரம் கனவுகள் நீங்கள் எத்தனை முறையும் வெள்ளை அடிக்கலாம். வெள்ளை ஜூலை என விளம்பரமும் செய்யலாம் அதிக சம்பளம் அதிக சலுகை அதிகம் அதிகம் அதிகம் என்று கோடி முறை கூப்பாடு போடலாம். ஆனாலும் ஜூலை கருப்புதான். அதை கருக்கிய யானையும் வாழேந்திய சிங்கமும் எல்லாமும் கருப்புதான்.

குழந்தை வரைய ஒரு நதி

Image
குழந்தை ஒன்றின் தூரிகையிலிருந்து பிறக்கிறது ஒரு நதி. கடதாசிக்கு வெளியே நதி நீர் தெறிக்க வளைந்து செல்கிறது. கசங்கி இருந்த கடதாசி என்பதால் மேட்டு நிலம்போல் அது கிடக்க ஒவ்வொரு மேட்டையும் மேவிக் பாய்கிறது நதி. நதியினுள்ளே மீனும் நதிமேலே பூவும் கரை நெடுக நுரை முத்தம் வளைந்து செல்கிறது நதி. காடு கடந்து வயல் கடந்து கடதாசியின் கரையைத் தொட்டு அருவியாகிறது. அகலமாய் நிளமாய் குழந்தைகள் கொண்டாட ஒவ்வொரு அடுக்கையும் ஒன்றிற்கு கொடுத்திருக்கும் குழந்தை வரைந்த நதி. ஒற்றையைத் திருப்பி பிற்குறிப்பை சேர்த்து கோப்பிடுகிறது குழந்தை, தொலைந்து போன என் நதியைக் கண்டால் கூட்டி வாருங்கள் என்னிடத்தில்.