ஆனாலும் ஜூலை கருப்புத்தான்


நீங்கள் எத்தனை முறையும்
வெள்ளையடிக்க முயற்சிக்கலாம்.

வீட்டுக்கு வண்ணம் பூசுவது போல
ஒரு கோடு
இரண்டு கோடு
மூன்று கோடு
ஏன் நான்கு கோடுகள்
கூட பூசலாம்.

உங்கள் நீண்ட
யானைக் கையால்
பெரிய தூரிகை பிடித்து
விரும்பிய அளவு மையிட்டு
திரும்பத் திரும்பப் பூசலாம்.

ஆனாலும் ஜூலை கருப்புதான்.

மேகங்கள் அல்ல 
ஆயிரம் புகைகள்
அடர்ந்து திரண்டு
நிலவை மறைத்துக்
கருக்கிய ஜூலை.

ஒரு புகை, ஒரு உயிர், ஒரு கனவு
ஆயிரம் புகைகள்,  ஆயிரம் உயிர்கள், ஆயிரம் கனவுகள்

சாலையின் தார் அல்ல
தாரிற்கும் கீழே
ஊடுருவிய குருதியில்
நிலம் சிவந்து
பின்பு கறுத்த ஜூலை

ஒரு வாள்வீச்சு, ஒரு உயிர், ஒரு கனவு
ஆயிரம் வாள்வீச்சுக்கள், ஆயிரம் உயிர்கள், ஆயிரம் கனவுகள்

நீங்கள் எத்தனை முறையும்
வெள்ளை அடிக்கலாம்.
வெள்ளை ஜூலை என
விளம்பரமும் செய்யலாம்
அதிக சம்பளம்
அதிக சலுகை
அதிகம் அதிகம் அதிகம் என்று
கோடி முறை கூப்பாடு போடலாம்.
ஆனாலும் ஜூலை கருப்புதான்.
அதை கருக்கிய யானையும்
வாழேந்திய சிங்கமும்
எல்லாமும் கருப்புதான்.

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?