Posts

Showing posts from May, 2018

புத்தகங்களின் எதிரிகள்

Image
இந்த உலகு புத்தகங்களின் எதிரிகளுக்குச் சொந்தமானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இது பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்டநாள் இருந்தது. இன்று எப்படியும் எழுதியாக வேண்டும் என்று அமர்ந்தே விட்டேன். இந்தப் பதிவை எழுதுவதற்கு இன்றைய நாளைவிட பொருத்தமான நாள் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. யாழ் நூலகம் தீயிடப்பட்ட கருப்பு  தினம். அதனாற்தான் இன்று இதை எழுதியே தீர்வது என்கிற முடிவுடன் எழுதுகிறேன். காலம் தோறும் புத்தகத்தின் எதிரிகள்தான் உலகை ஆண்டிருக்கிறார்கள். அது பற்றிப் பார்க்கும் முன்னர் எனது பார்வையில் புத்தகம் என்றால் என்ன என்பதைச் சொல்லவேண்டி இருக்கிறது. புத்தகம் ஆத்மார்த்தமானது, அது ஒரு அனுபவம் என்கிற அழகியல்வாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் வெளியே நின்று புத்தகங்களை நோக்குபவன் நான் (அதற்காக புத்தகம் குறித்த அழகியல் வாதக் கருத்துக்களை முற்றாக மறுப்பவன் அல்லன். புத்தகம் ஒரு அனுபவமும் தான்).  என்னைப் பொறுத்தவரை புத்தகம் என்பது ஒரு கருவி. ஒரு ஆயுதம். வாய்மொழிக் கதைகளுக்கு அடுத்ததாக மனிதனிடம் இருக்கும் சிறந்த தொடர்பாடல் ஊடகம் அது. புத்தகம் என்பது உலகின் ஒட்டுமொத்த அறிவும் சேமி

ஆரோன் சுவாட்ஸ்: இணையச் சுதந்திரத்தின் குறியீடு

Image
"போராட வீதிக்கு இறங்கும்போதும் போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பும்போதும் யாருடைய கண்களுக்கும் புலப்படாத, யாருடைய காதுகளுக்கும் கேட்காத வலுவற்ற மனிதர்களாக எங்களை நாங்களே எண்ணிக்கொள்வது மிகவும் எளிதானது. ஆனால் நான் இன்று சொல்கிறேன் நீங்கள் மிகவும் பலமானவர்கள். வீதிக்கு இறங்கினால் உங்களால் இந்தச் சட்டத்தை தடுக்க முடியும்" இணையத்தில் இடம்பெறுகின்ற காப்புரிமை மீறல்களை கட்டுப்படுத்தல் எனும் பெயரில் அமெரிக்க அரசாங்கம் கொண்டுவரவிருந்த 'இணையவழித் திருட்டை தடுக்கும் சட்டம்' என்கின்ற SOPA சட்டத்தை எதிர்த்துப் போராட மக்களை அழைக்கும் போது ஆரோன் சுவாட்ஸ் கூறிய வசனங்கள் இவை. ஆம், ஆரோன் சுவாட்ஸ் இணையத்தின் சொந்தப் பிள்ளை என அழைக்கப்பட்ட ஒரு போராளி. சுதந்திர இணையத்தையும் அறிவு என்னும் பொதுச் சொத்தையும் பாதுகாப்பதற்காக போராடி மடிந்த ஒரு போராளி. இறக்கும்போது ஆரோனுக்கு 26 வயது. அந்த 26 ஆண்டுகால வாழ்நாளில் அரைவாசியை அவன் ஒரு செயற்பாட்டாளனாகக் கழித்திருக்கிறான். 14 வயதில் இருந்தே இணையத்துக்காக பங்களிக்கவும் குரல் எழுப்பவும் தொடங்கினான் ஆரோன் . இணையத்துக்காக எத்தனையோ மென

அந்தப் பொறியைப் பார்த்திருக்கிறாயா?

Image
குரங்கு பிடிக்கும் வேடனைப் பார்த்திருக்கிறாயா நீ? அவன் கையில் ஒரு குடைந்த தேங்காய் இருக்கும் ஏன் என்று, என்றேனும் ஜோசித்திருப்பாயா? பழுத்ததேங்காய் பொறுக்கி எடுத்து பக்குவமாய் பொறி செய்வான் உட்குடைந்து எல்லாம் எடுக்க - ஓரு சிறு ஓட்டையோடு சிரட்டைகூடாய் அது எஞ்சி நிற்கும். அந்தப் பொறியைப் பார்த்திருக்கிறாயா நீ? மரத்தோடு அதைப் பிணைத்து - உள்ளே பழங்கள் கொஞ்சம் போட்டுவைப்பான். அவ்வளவுதான் குரங்கு பிடிக்கத் தேவையான பொறி! குரங்கு வரும். பழத்தைப் பார்க்கும். தன் விரிந்த கையை உள்ளேவிடும். பார்த்திருக்கிறாயா? பழத்தை பொறுக்கி இறுகப் பற்றி - மெதுவாகக் கையை வெளியில் இழுக்கும். கை வெளியே வராது. ஏன் என்று அறிவாயா நீ? பழங்கள் கையில் இருக்கும் வரை, கையை வெளியே வரவிடாத சின்ன ஓட்டை தேங்காயில்! கடைசிவரை கைவிடாத பேராசை குரங்கிடம். வேடன் வந்தால் வேகமாய் இழுக்கும் பழத்தை மட்டும் அது விடாது. வேடன் வருவான் கயிறெடுப்பான். குரங்கு பிடிப்பான் போய்விடுவான். இப்போது சொல், குரங்குக்கு தேங்காய்; உனக்கு என்ன? -அதீதன்

விமான உரையாடல்கள்

Image
குறிப்பு:  இது நான் எழுதிய கதை அல்ல. தங்கை தான் பார்த்த காணொளியொன்றைப் பற்றி என்னிடம் சொன்னபோது சில மாற்றங்களோடு கதையாக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதன் வெளிப்பாடே இக்கதை. ****** விமானத்துக்குள் ஏறிய பின்னரும் கையில் புத்தகத்துடனேயே இருந்தாள் அந்தப் பத்து வயது சிறுமி. அவளுடைய பெயர் ஆருதி. ஒரு கருத்த அட்டைப் புத்தகம் அது. அவள் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்ததால் புத்தகத்தின் முன்னட்டையைப் பார்க்க முடியவில்லை. ஒரு பெரிய புத்தகம் என்பது மட்டும் தெளிவாய் தெரிகிறது. நீண்ட நேரம் காலியாக இருந்த இருக்கையில் ஒரு முதியவர் வந்து அமர்ந்தார். அவரது பெயர் முக்கியமானதல்ல. வயது அறுபதுக்கும் மேல். இந்த விளக்கம் இப்போதைக்குப் போதும். விமானம் ஓடுபாதையில் இருந்து எழுந்து பறக்கத்தொடங்கிவிட்டது. நீண்ட நேரம் அமைதியாய் இருந்தவர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார். "என் பெயர் '......', நான் '......' மதத்தின் மதகுரு" என்றார். ஆருதி அப்போதும் புத்தகத்திலேயே மூழ்கிக்கிடந்தாள். பெரியவர் மீண்டும் முயற்சித்தார். மெதுவாக இருமியவாறு, "உங்களிடம் தா

மடியில் உறங்கும் பூனை

Image
ஒரு நீண்ட பயணத்தை முடித்து வீடு வந்திருந்தேன். படிப்பதற்காக கொழும்புக்குச் சென்றதிலிருந்து என்னவோ நான் வீட்டுக்கு விருந்தினன் போல மாறிப் போய்விட்டேன். மாதம் ஒருமுறையோ, சிலவேளை இருமாதத்திற்கு ஒருமுறையோதான் வீடு. இந்த ஏழு வருடங்களும் அப்படித்தான் கழிந்திருக்கிறது. இன்றும் அப்படித்தான் வீட்டுக்கு வந்தேன். வீட்டாரின் வழமையான எல்லாவற்றையும் தாண்டி எனது கதிரையில் வந்து அமர்ந்தேன். இந்தக் கதிரை இன்னாருக்கு என வீட்டில் யாருக்கும் பட்டயங்கள் எழுதியிருக்கவில்லை ஆனாலும் நான் வீட்டிலிருக்கும் பொழுதில் அது என்னுடைய கதிரைதான். அதனால்த்தான் வீடு வந்ததும் முன்னுக்கே இருந்த நான்கு கதிரைகள் தாண்டி அந்தக் கதிரையில் வந்து அமர்ந்தேன். அமர்ந்து கொஞ்ச நேரம் ஆகியிருக்கும். எனதருகே வந்தது எங்கள் வீட்டுப் பூனை. நான் எப்போதும் அதை என்னுடைய பூனையாகக் கொண்டாடியதில்லை. அதுவும் தான். பசித்தால் அருகில் வரும் நான் உணவு வைப்பேன். அவ்வளவுதான் எங்கள் உறவு. பூனை எங்கள் வீட்டிற்கு வந்த பன்னிரண்டு வருடங்களில் இது மாறியிருக்கவில்லை. இன்று மாறியது. எனதருகில் வந்து எனது முகத்தை ஒரு கணம் பார்த்தது. நானும் பார்த்தேன். அதன்

வாடிய கண்களுக்குள் பிறக்கிறது ஒளி

Image
அந்தக் கண்கள் வெறித்து பார்த்தன வாகனத்தின் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த சிறுவனின் கண்கள் வெளியில் இருந்து நான் முறுவலித்தேன் முறுவல் கொண்டான் ஆயினும் கண்ணில் ஒளியில்லை பத்து ஆசன வாகனத்தில் - ஈர் பத்தாம் பிள்ளை அவன் அமளிகள் மத்தியில் ஒரு புத்தன் போல ஞானம் கிடைக்கமுன் புத்தனின் எப்படி இருந்தனவோ அப்படியே இருக்கின்றன அவனின் கண்கள் ஒளி இழந்த கண்களால் எதையோ தேடுகிறான் சிலவேளை அவன் பலதைத் தேடக் கூடும் அமைதியை அவன் தேடியிருக்க வாய்ப்பில்லை அமைதி சூழ்ந்த கணத்திற்கூட கண்கள் ஒளிரவில்லை அந்தப் புத்தன் வேறெதையோ தேடுகிறான் ஒருவேளை அத்தேடல் அன்புக்கானதாயும் இருக்கலாம் அவனைச் சூழ அதுவும்தான் கொட்டிக்கிடக்கிறது. நட்பாய் அது கரை புரள்கிறதே பின் என்ன? வெளியே மழையில் நனைந்தபடி அந்தக் கண்களைப் பார்க்கும் எனக்கு அந்தக் கண்களின் தவிப்பை ஏன் உணரமுடியாது போனதில் வியப்பில்லை ஓடி ஓய்ந்து நின்ற வாகனத்திலிருந்து முதலாய் இறங்கி மழையை அனைத்துக் கொண்டான் கண்கள்மூடி ஒருகணம் அப்படியே நின்றிருந்தான் மறுகணம் நிமிர்ந்தான் அகல விரிந்து வானம் பார்த்த கண்களில் பிறந்தது அன்பின

இன்னோர் பூமியின் கடவுள்

Image
 நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா, அவருக்கு என்ன என்ன சக்திகள் எல்லா இருக்கிறது என அறிவீர்களா, அவரது கண்கள் எவ்வளவு தூரம் பார்க்க வல்லன, அவரது செவியின் துல்லியம் எவ்வளவு, அந்த மூக்குகள் சுவாசிக்கும் ஆற்றலையும் மோப்பத்திறனையும் கொண்டிருக்கின்றனவா? அடுக்கடுக்காய் கடவுள் பற்றிக் கேள்விகள் கேட்பதால் நாத்திகம் பேசும் கட்டுரை என்று நினைத்துவிடாதீர்கள். இது கடவுள் பற்றிய ஒரு குட்டிக் கதை. ஈரேழு பதினான்கு உலகங்களில் ஏதோ ஒரு உலகத்தின் கடவுளின் கதை. எந்த உலகம் என்று சரியாக நினைவில் இல்லை. கதை போகின்ற வழியில் ஞாபகம் வந்தாற் சொல்கிறேன். இப்போதைக்கு வேண்டுமானால் "பூமி" என்றே வைத்துக் கொள்வோம். பூமியின் கடவுள் பற்றி என்னிலடங்காக் கதைகள் இருக்கிறது. அவர் எப்படிப்பட்டவர், எவ்வளவு சக்திவாய்ந்தவர், அவர் எப்படிக் கடவுள் ஆனார், கண் தெரியாமலே உலகை ரட்சிக்கும் அவரது வல்லமை, எனப் பல கதைகள். நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஆமாம், அந்தப் பூமியின் கடவுளுக்கு கண்கள் தெரியாது. எங்கள் பூமியில் இருக்கும் சர்வ வல்லமை கொண்ட கடவுள்மார் அங்கு இல்லை, என்ன செய்வது. அந்தப் பூமியைக் காப்பாற்ற அவர் கண்களை நம்

முதலாவது கல்

Image
நான் ஒன்றும் இயேசு அல்லன் பாவம் செய்யாதவர் முதலாவது கல்லை எறியுங்கள் என்று சொல்லிவிட்டுப் போக  நீ ஒடுக்கப்படுகிறாயா ஒடுக்குமுறை உனக்கு வலிக்கிறதா முதலாவது கல்லை எறிய நீயே சிறந்தவள் பாலஸ்தீனத்தின் கல்லும் காஷ்மீரின் கல்லும் இந்தத் தூத்துக்குடியின் கல்லும் வெறும் கல் அல்ல குருதி படிந்த விடுதலையின் முதலாவது கல் ஒடித்து வீழ்த்தப்பட்ட உன் வலுவிழந்த கைகளால் ஒரு கல்லை எடு பலம் இல்லாது போயினும் பரவாயில்லை எட்டும் வரை ஏறி விடுதலையின் முதலாவது கல்லை எறி ஒடித்து விழுத்தப்பட்ட கைகளின் வலிமையை உலக அறியட்டும்