நீந்தத் தெரியாத கனவுகள்


புத்தகப் பை
அடுக்கத் தெரிந்தவர்களுக்கு
நீந்தத் தெரியாததுதான் குற்றம் என்று
தேவையற்றதை திறக்கும் விழாக்களில்
அவர்கள் பேசக் கூடும்.
 
தாங்களே அதிக பாலங்கள்
கட்டியதாகவும்
சான்றாக அவர்களது
வண்ணமய மாளிகைகளை
நாங்கள்தான் சிறப்பாய் செய்தோம்
என்கிற வார்த்தைகளோடு
அவர்கள் காட்டக் கூடும்.
 
அவர்கள்தான் இவர்கள்தான் என
இரண்டு பக்கங்களில் இருந்தும்
கைகள் நீளக் கூடும்.
 
நாளைய அனர்த்தத்தை
இன்றே தடுக்க
நகரங்களின் மத்தியில்
சில நீச்சல்குளங்களும்
நீச்சல் வகுப்புகளும்
உருவாகவும் கூடும்.
 
மக்களை அமைதியாக்க
இறந்தவர்களுக்கான
ஒரு புதிய தூபியை
அவர்கள் முன்மொழிவார்கள்
அது கட்டப்படப் போகும்
விளையாட்டு மைதானத்தின் மூலையிலோ
அல்லது கட்டிமுடித்த
புது விகாரையின்
புனிதத்தை குழைக்காது
எல்லைக்கு வெளியேயோ
எழுப்பப்பட்டு
நீந்தத் தெரியாத கனவுகள் என
பெயர் சூட்டப்படக் கூடும்.
 
மக்களைக் காத்தல்
என்கிற ஒன்றைத் தவிர
இந்த சபிக்கப்பட்ட தேசத்தில்
எல்லாமும் நடக்கக் கூடும்.

Comments

Popular posts from this blog

மெய் நீ

மலையின் பெயர் என்ன?