அந்தரத்தில் இருப்பவர்கள்.

29-10-2012 ல் பாடிப்பறைக் கவியரங்கத்தில் வாசித்த கவிதை.


சமர்ப்பணம் 

மதத்தின் பெயரால் கொல்லப்பட்ட
புத்தனுக்கும் இயேசுவுக்கும் சமர்பணம்.

***

"உடல்முழுதும் வியர்வையெனக்
குருதி வழிய  
தினம் தினம் அல்லலுற்று, அவதிப்பட்டு
கணப்பொழுதும் நிம்மதியின்றி
 அலைபவர்களே!

முந்தைப் பிறப்பின் பாவத்திற்காய்
 வாழ்க்கையின் காலம் முழுதும்
 இருப்பைத் தொலைத்து  
துன்பம் போக்க அங்குமிங்கும் ஓடி
 வாழ்வைப் பறிகொடுத்துவிட்டு  
அந்தரத்தில் இருப்பவர்களே - என் மக்களே!

இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் போல்
 உம்முடன் ஒட்டியிருக்கும் கஷ்டங்களைப் போக்க
 உம்மை பாவங்களில் இருந்து மீட்க
 இந்த உலகை இரட்சிக்க
 எல்லாம் வல்ல பரம்பொருளாய்
 எமக்கான வழிகாட்டியாய் இருக்கும் அவன் - மீண்டும்  
பூமிக்கு வரப்போகிறான்.

உன்னையும் என்னையும் படைத்தவன் அவன்
 உலகின் எல்லா அதிசயத்தையும் அமைத்தவன் அவன்  
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என   
எல்லாம் தந்தவன் அவன்

அவன் வரும் நாளில்
 உங்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்கும்
 அல்லல் விலகும் - நிறைவேறா ஆசைகள்
 நிறைவேறும் - ஆதலால்  
அவன் வரும்வரை பொறுத்திருங்கள்,  
உங்களுக்கென ஈயப்பட்ட வேலைகளை மட்டும் செய்துகொண்டிருங்கள்.

உங்கள் கண்முன் நடக்கும் அத்தனை
பாவ புண்ணியத்தையும்
அவன் கணக்கில் வைப்பானாகையால்  
நீங்கள் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்;
வாய் திறந்து பேசாதீர்கள்;
எல்லாவற்றையும் நடத்துபவன் அவனே என்பதால்  
நீங்கள் சும்மாயிருங்கள்.

துன்பமும் துயரமும் சேர்ந்து  
உமது மனதுக்குள் தீட்டிவைத்த அத்தனை கேள்விக் கணைகளையும்
அவன் அறிவான்  
எனவே,  
அவற்றை யாரை நோக்கியும் எறியாதீர்கள்
முடிந்தால் மனதுக்குள்ளேயே குழிதோண்டிப் புதைத்துவிடுங்கள்
வேதனைகளையும், வேண்டுகோள்களையும்
யாருக்கும் தெரியாமல் இரகசியமாய் அவனிடம் மட்டும் சொல்லுங்கள்
கடவுள் காப்பாராக..."

பல்லாயிரம் ஆண்டுகால இந்தப் பிரச்சாரம்
இன்னமும் ஓய்ந்தபாடில்லை.  
கோடிக் காதுகள் வழிநுழைந்து  
இன்னும் பலருக்கும் பரிமாறப்பட்டு  
மனிதர் தம் மனதுக்குள் நுழைந்து
மனதின் வெம்மை தணிக்கவே இப் பிரச்சாரம் என்பதால்  
இது இனிமேலும் ஓயப்போவதில்லை   

மனதின் வெம்மை தணிக்காவிடில்...

இந்த வெம்மையைத் தணிக்காவிடில்
 மனிதன் அரக்கனாகிவிடுவான் 
அரக்கனான பின் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவான்
தன் மனதினிலே தீட்டப்பட்ட அம்புகளையும் தொடுப்பதற்காய்
தானே ஒரு வில்லைச் செய்து - அதைக்
கையில் ஏந்திக் கொள்வான்.
தன் துன்பம்,
உலகின் துன்பம்
அத்தனைக்கும் காரணமான எல்லாவற்றையும்,
தன் உடல் முழுதும் வியர்வையெனக் குருதியை வழியவைத்து
அதைப் பாணமாய்ப் பருகிக் கொண்டிருப்பவர்களையும்
அகல விரிந்த தன் அரக்கக் கண்களால் தேடுவான்;
குறிவைப்பான்.
அம்பினை தொடுக்கவும் அவன் தயங்கமாட்டான்.
உலகை மீட்க அவனாகவே ஒரு வழியைக் கண்டுபிடிப்பான்
மக்களைத் திரட்டுவான் - ஞாலம் முழுதும் அவன்
போர் செய்வான்
இறுதியில் வென்றும் விடுவான்.

உலகம் பசுமையாய் இருக்கும்.

காணும் இடமெல்லாம் பசுமையில் விரிந்து கிடக்க
அதை ரசித்தபடி காலம் உருளும் - மக்கள்
பசுமையையும் அரக்கனையும் 
ஞாபகத்தில் வைத்திருப்பர்.
அவன் வந்த வழி,
தொடுத்த அம்புகள்
பிடுங்கியெறிந்த களைகள் என
எல்லாவற்றையும் மறந்துபோவர்.

இன்னும் காலம் கடக்கும்!
அந்தப் பரந்த புற்தரையில் மீளவும்
களைகள் முளைக்கும்
களைக்கு காவலரும் முளைப்பர்
களையின் காவலர்கள் அரக்கனை தெய்வமாக்குவர்
புதிய தெய்வம் உங்களைக் காக்கவரும்வரை
பொறுமை பேணச் சொல்வர் - புதியவழியில்
பிரச்சாரம் செய்வர்.

இயேசுவுக்கும் புத்தனுக்கும் நடந்தது போல
நாளை வேறொருவனுக்கும் நடக்கும்.
மக்கள் அப்பொழுதும்
அந்தரத்திலேயே இருப்பர்.

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?