இன்னோர் பூமியின் கடவுள்

 நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா, அவருக்கு என்ன என்ன சக்திகள் எல்லா இருக்கிறது என அறிவீர்களா, அவரது கண்கள் எவ்வளவு தூரம் பார்க்க வல்லன, அவரது செவியின் துல்லியம் எவ்வளவு, அந்த மூக்குகள் சுவாசிக்கும் ஆற்றலையும் மோப்பத்திறனையும் கொண்டிருக்கின்றனவா?

அடுக்கடுக்காய் கடவுள் பற்றிக் கேள்விகள் கேட்பதால் நாத்திகம் பேசும் கட்டுரை என்று நினைத்துவிடாதீர்கள். இது கடவுள் பற்றிய ஒரு குட்டிக் கதை.

ஈரேழு பதினான்கு உலகங்களில் ஏதோ ஒரு உலகத்தின் கடவுளின் கதை. எந்த உலகம் என்று சரியாக நினைவில் இல்லை. கதை போகின்ற வழியில் ஞாபகம் வந்தாற் சொல்கிறேன். இப்போதைக்கு வேண்டுமானால் "பூமி" என்றே வைத்துக் கொள்வோம்.

பூமியின் கடவுள் பற்றி என்னிலடங்காக் கதைகள் இருக்கிறது. அவர் எப்படிப்பட்டவர், எவ்வளவு சக்திவாய்ந்தவர், அவர் எப்படிக் கடவுள் ஆனார், கண் தெரியாமலே உலகை ரட்சிக்கும் அவரது வல்லமை, எனப் பல கதைகள்.

நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஆமாம், அந்தப் பூமியின் கடவுளுக்கு கண்கள் தெரியாது. எங்கள் பூமியில் இருக்கும் சர்வ வல்லமை கொண்ட கடவுள்மார் அங்கு இல்லை, என்ன செய்வது.

அந்தப் பூமியைக் காப்பாற்ற அவர் கண்களை நம்பியில்லை. அவரிடம் சிறந்த காதுகளும் மூக்குகளும் இருப்பதால் அவற்றாலேயே பூமியை அவர் நன்றாய் உணர்ந்துவிடுவார். அபராமான கேட்டற்திறன் மக்கள் பேசுவதை மட்டுமல்ல மக்கள் மனதில் இருக்கும் அனைத்தையும் அறியப் போதும் என்பது அவரது வாதம். இறுதித் தீர்ப்பு நாளில் தீர்ப்பளிக்கும்போது எவரது உருவமும் தீர்ப்பை மாற்றக் கூடாது என்பதற்காகத்தான் அவரது பார்வைத்திறன் பறிக்கப்பட்டது.

அவரது கேட்கும் சக்திதான் இப்போது அவருக்கு எல்லாமே. அவருக்குப் பூமியைப் படைக்கும் சக்தி இருந்ததா என சரியாகத் தெரியாது. இந்தப் பூமியைக் கடவுளின் தந்தை படைக்கும்போது இவர் சிறு குழந்தையாக இருந்தார் என்றொரு பழைய கதையும் இருக்கிறது. எனினும் தந்தை பற்றிய விவரமான குறிப்புகள் எதுவும் பூமியில் இல்லை, எமக்குத் தெரிந்ததெல்லாம் பூமியை தற்போதிருக்கும் கடவுள் படைக்கவில்லை என்பதுதான்.

தந்தை இளைப்பாறிய பின்னர் எல்லாப் பொறுப்பும் அவரின் தலையில்தான். பாவம் கடவுள்…

தனது வேலைகளை இலகுவாக்க தனக்கென ஒரு துணையையும் தேடிக் கொண்டார். முதலில் மனைவி பின்னர் மகன்கள் எனக் குடும்பம் நீண்டுகொண்டே போனது. பதினேழாவதாக மகள் வந்து சேர்ந்ததுடன் கடவுளுக்கு பொறுப்புக்கள் முற்றாகக் குறைந்து போயின. ஒரே அறையில் இருந்து வேலையை முடிக்கக் கூடிய அளவுக்கு வேலைகள் குறைந்து போயின. கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாய் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதையே கடவுளும் விரும்பினார். பாவம் அவர் மட்டும் சோம்பேறியாய் இருக்கக்கூட்டாதா என்ன?

அறையிலேயே இருப்பார், எல்லா சத்தத்தையும் கேட்டு, ஒவ்வொன்றாக பரிசீலித்து, அவற்றை வேலைகளாகப் பிரித்து தன் குருட்டுப் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு உறங்கிவிடுவார்.

இறுதித் தீர்ப்பு நாளுக்கு பிள்ளைகளும் தயாராக வேண்டும் என பிள்ளைகளது பார்வைத் திறனும் பறிக்கப்பட்டதை, நான் மீளச் சொல்லத்தேவையில்லை.

சோம்பல்த்தனத்தில் பிள்ளைகளும் ஒன்றும் சலைத்தவர்களில்லை. தங்கள் வேலையை செய்ய ஆளுக்கு நூறு அடிமைகளை வைத்திருந்தார்கள் அவர்கள்.

தனது பதினேழாவது மகள் தானியிடம் மட்டும் அவர் வேலைகளை சொல்வதேயில்லை. அப்பா சொல்லிவிட்டார் என்பதற்காக மட்டுமே அவள் ஒரு வேலையை செய்துவிடமாட்டாள், ஆயிரம் கேள்வி கேட்பாள். கேள்விக்கு பதில் சொல்லும் சோம்பலிலேயே அவளுக்கு வேலை சொல்வதை விட்டு விட்டார்.

கடவுள் படைக்கும்போது அவளைப் பதில்களின் தேவதையாகத்தான் படைத்தார். பதில் சொல்கையில் கேள்விகளைக் கேட்டுக் கேட்டு கேள்விகளின் தேவதையாகவும் மாறிவிட்டாள். இப்போது அவள்தான் கேள்விகள் பதில்கள் இரண்டுக்கும் தேவதை.

ஒருமுறை கண்களைப் பற்றிக் கேட்டாள். "தந்தையே… கண்களின் பார்க்கும் சக்தியை இல்லாமல் செய்ததற்குப் பதிலாக, ஏன் தீர்ப்பு நேரத்தில் துணியால் கண்னைக் கட்டியிருக்கக்கூடாது?”

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கி, பின் அதில் இருந்து அவள் மிண்டும் கேள்வியைக் கேட்க, அவரும் பதில் சொல்லிச் சொல்லி அந்தக் கேள்வி பதில் நேரம் நீண்டுகொண்டே போனது. பதில் சொல்லியே கடவுள் களைத்துப் போனார். அதில் இருந்து தேவையில்லாமல் மகளிடம் கதைப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்தார் கடவுள்.

கடவுளின் சோம்பல் பற்றி மக்களும் கொஞ்சம் அறிவார்கள். "நல்ல கடவுள்தான் ஆனால் கொஞ்சம் சோம்பேறி...” அடிக்கடி இப்படித்தான் மக்கள் புலம்பித் தீர்ப்பார்கள்.

அதிலும் இப்போது அடிக்கடி புலம்புகிறார்கள். உணவுத் தட்டுப்பாடுதான் அப்படிப் பேசவைக்கிறதுபோலும். எப்போதும் இருக்கும் பிரச்சினைதான் என்றபோது இந்தவருடம் கொஞ்சம் அதிகமாகவே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனாலும் கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். இல்லை, கேட்டுக்கொள்வார் என்ற அசைக்கமுடியா நம்பிக்கையில் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

எல்லோரும் அமைதியாக இருக்கிறார்களா எனக் கேட்டால், இல்லை எனத்தான் சொல்லவேண்டும். அங்கேயும் ஒரு கேள்விக் கும்பல் இருக்கிறது. அவர்களுக்கும் கடவுளுக்கும் ஒத்தே வராது. அதில் பலர் கடவுள் இல்லை என்பார்கள். இன்னும் சிலர் கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அவர் எமக்குத் தேவையில்லை என்பார்கள்.

கடவுளுக்கும் அவர்களைப் பிடிக்கவே பிடிக்காது. என்னதான் நல்ல கடவுளாக இருந்தாலும் கொஞ்சம் திமிர் இருக்கத்தானே செய்யும். ஆனாலும் கடவுள் அவர்களை பெரிதாகக் கணக்கிலெடுப்பதில்லை.

"பிரச்சினை பெரிதாக இருக்கும்போது மக்கள் அவர்கள் பின்னால் போவார்கள். பிரச்சினை கொஞ்சம் சிறிதானாற்போது நான்தான் காப்பாற்றினேன் என்று என்பின்னால் வந்துவிடுவார்கள். அதனால் கவலைப்படவும் தேவையில்லை, கணக்கில் எடுக்கவும் தேவையில்ல" கடவுள் பிள்ளைகளிடம் அடிக்கடி சொல்வார்.

அன்று ஒருநாள் தானியிடமும் இதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

“நீங்கள் பிரச்சினைகளை வேகமாகத் தீர்த்துவிட்டால் மக்கள் அந்தப் பக்கம் போகவே மாட்டார்களே அப்பா… இந்த உணவுப் பிரச்சினையை எப்போது தீர்க்கப் போகிறீர்கள்?” தானி கேட்டாள்.

“நீ வளரும் பிள்ளை தானி. உனக்குத் தெரியாதது பல இருக்கின்றன. பிரச்சினைகளை அதன் பாட்டிலேயே விட்டுவிடவேண்டும், நாங்கள் தீர்வைக் கொடுக்கக்கூடாது.”

“ஏன் தந்தையே?”

“உலகம் தன்பாட்டிலேயே இயங்கும் அம்மா. அப்படித்தான் அது உருவாக்கப்பட்டிருக்கிறது."

“அப்படியானால், படைத்தலும் அழித்தலும் மட்டுமா இப்போது எங்கள் வேலை?”

“இல்லையில்லை… அதைக்கூட மனிதர்களே செய்துகொள்வார்கள்.”

“படைக்கும் சக்தியையும் அழிக்கும் சக்தியையும் இப்போது நீங்கள் பயன்படுத்துவது இல்லையா?”

“அழிக்கும் சக்தி மட்டும்தான் இருக்கிறது மகளே, அதை எப்போதாவது பயன்படுத்துவது உண்டு.”

"அப்படியானால் மனிதர்களுக்கு நாம் தேவையில்லைத்தானே?” தானி மெதுவாய் முனுமுனுத்தாள்.

கூர்மையான காதுகள் கொண்டவரல்லவா அவருக்குக் கேட்டுவிட்டது. அவரது முகம் கறுக்கத் தொடங்கியது. ஆனால் அதைத்தான் தானியால் பார்க்க முடியாதே. தொடந்து சில வசனங்களை உதிர்த்தாள் பின் எழுந்து போய்விட்டாள்.

இந்தக் கேள்விக் கும்பலும் பலவழிகளில் அவளைப் போலத்தான். ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே பூமியின் பிரச்சினை பற்றியும் தெரியும், கண்களும் தெரியும். நாட்கள் போகப் போக கேள்விக் கும்பலின் பின்னால் மக்கள் கூட்டம் அதிகமாகச் சேர்கிறது. மேலும் கேள்விகளை எழுப்பி எழுப்பி கடவுளைப் பயமுறுத்தத் தொடங்குகிறார்கள்.

அவசர ஆலோசனைக்காக கூட்டத்தை கூட்டுகிறார் கடவுள். அதிலிருந்தே அவர் பயப்படத் தொடங்கிவிட்டார் என்று நிங்கள் புரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில் தந்தையிடம் இருந்தும் செய்தி வருகிறது.

"உன் கண்களைப்போலவே மூளையும் செயலிலந்து போய்விட்டதா? இப்போது உன்னையே அஞ்சவைக்கும் அளவுக்கு வந்து விட்டார்கள். இரும்புக் கரங்கொண்டு அந்தக் கும்பலை ஒடுக்கியிருந்தால் இப்போது உனக்கு இந்தப் பிரச்சினை வந்திருக்குமா? இப்போதும் சிக்கல் எதுவும் இல்லை அழிக்கும் சக்தியைப் பயன்படுத்து, அவர்களைக் கொன்று ஒரு பாடத்தைப் புகட்டு… கடவுளை அவர்கள் நம்பாததாற்தான் பிரச்சினை இன்னும் தீராமல் இருக்கிறது என்று உன் அடிமைகளை வைத்து மக்களுக்கு புத்தி புகட்டு. இப்படிக்கு அன்பு அப்பா." என்று முடித்தது செய்தி.

அனைத்துப் பிள்ளைகளும் கடவுளின் அறைக்கு அழைக்கப்பட்டார்கள். பிள்ளைகளின் அடிமைகளைக்கொண்டு ஒரு படையை உருவாக்கினார் கடவுள். பிள்ளைகளில் ஒருவரை தளபதியாகச் சொன்னார். ஒவ்வொரு பிள்ளையும் கண்முன் இருந்த பொறுப்பை கைமாற்றி விட்டார்கள். முத்தவன் இரண்டாமவன் மூன்றாமவன் என ஒவ்வொருவராய் மாறி தானியிடம் வந்து சேர்ந்தது பொறுப்பு.

தானி பேச முற்பட்டாள்.

"கேள்விகள் கேட்காதே... சொன்னதை செய்… இன்றிலிருந்து கேள்விகளை நான் தடை செய்கிறேன்.” கோபத்தில் உறுமினார் கடவுள்.

பதில்களின் தேவதையும் தானே என்பதை உணர்த்த எண்ணினாள் தானி.

"உங்கள் பிரச்சினை தீர்க்கப்படும்.”

“எந்தப் படையும் தேவையுமில்லை."

இரண்டே வசனங்களில் கடவுளின் கோபத்திற்கான பதிலையும் தன் தந்தையின் பயத்திற்கான பதிலையும் சொல்லிவிட்டு, கடவுளின் அறையில் இருந்து வெளியேறி வீட்டின் வாசலுக்கு வந்தாள் தானி.

இதுதான் அந்த வீட்டிலிருந்து வெளியேறப் போகும் முதற் சந்தர்ப்பம். தனக்கு உண்டான கோபத்தில் படைகளை உதறிவிட்டு வந்திருக்கிறாள். வாசலுக்கு வரும்போதுதான் தனக்கு பார்வை இல்லை என்பது ஞாபகம் வருகிறது. கண் தெரியாமல் என்ன செய்யப்போகிறோம் என்ற அச்சத்துடனே கதவருகே நின்றாள்.

அந்தவீட்டின் பிரதான கதவின் அருகிலே இப்போதுதான் முதன் முதலாய் வந்திருக்கிறாள். உண்மையில் கடவுளின் குடும்பத்தில் யாரும் அந்தக் கதவைத் தாண்டியதில்லை. இவள்தான் முதலாவது ஆள்.

கதவைத் திறந்தாள். கதவு திறக்கவில்லை. ஒரு சிறையின் கதவு போல இறுக்கமாக இருந்தது அந்தக் கதவு. இதையே காரணம் சொல்லி திரும்பிவிடுவோமா என எண்ணியவள் தனக்குத் தானே "இல்லை… கதவை உடை." எனச் சொல்லியவாறு கதவை முட்டுகிறாள்.

கதவு திறக்கிறது.

தன்னுடன் சேர்த்து தானியின் கண்களையும் திறந்து விடுகிறது கதவு. நட்சத்திர ஒளியும் மின்மினிகளின் ஒளியும் அவள் முன் விரிந்து படர்கின்றது.

தானி பார்வை அற்றவளில்லை. அந்தக் கண்ணிற்கு பார்வை புதிதாய் வரவில்லை. இத்தனை நாளும் அவை இருளையே பார்த்தவண்ணம் இருந்தன.

உறைந்துபோய் நிற்கிறாள் தானி. கேள்விகளின் தேவதைக்கு ஆயிரம் கேள்விகள் மனதில். முன்வைத்த கால்களை இரண்டு அடி பின்வைக்கிறாள். கதவை மீண்டும் மூடுகிறாள். இருள் அவளது கண்களை அப்பிக்கொள்கிறது.

மீண்டும் கதவைத் திறக்கிறாள். பதில்களின் தேவதையை கட்டி அணைக்க மின்மினிகள் பாய்ந்து வருகின்றன.

வெளியே வந்து கதவை மூடினாள். அமைதியாய் வாசற்படியில் அமர்ந்தாள். மனதில் தோன்றிய அத்தனை கேள்வியையும் ஒன்றன்பின் ஒன்றாய் மீள அசைபோட்டாள்.

எவ்வளவு காலம் அங்கேயே அமர்ந்திருந்தாள் என அவளுக்கே தெரியாது. சில இரவுகளும் பகல்களும் மாறியமை மட்டும் அவள் அறிவாள். பல கேள்விகளுக்கு பதில் தெரிந்தது. சில புதிர்களாய் மாறிப் போயின.

எல்லாக் கேள்விகளும் மறைந்து, "பசி எடுக்கிறதே என்ன செய்யலாம்?” என்ற கேள்வி மட்டுமே நினைவில் நின்றது. மக்களின் பசி தேவதையையும் தொற்றிக்கொண்டது.

ஊருக்குள் செல்லும் பாதையில் நடக்கத்தொடங்கினாள். காடுகள் மலைகள் தாண்டி உடைந்த கோட்டை ஒன்றிற்கு வந்து சேர்ந்தாள். அங்கே கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. ஆண்கள் பெண்களாக பதினாறுபேர் கூடியிருந்தனர்.

“எனக்குப் பசிக்கிறது." கூட்டத்தைக் தானியின் பக்கம் திரும்பவைத்தது அந்த வசனம்.

“யாருக்குத்தான் பசியில்லை." உடனே பதில் வந்தது.

“நான் சில நாட்களாக உண்ணவேயில்லை" தானியின் குரல் தளதளத்தது.

“இங்கு எல்லோரும் அப்படித்தான், கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது குடிக்கிறீர்களா?" தண்ணீர்க் குவளையோடு வந்தான் ஒருவன்.

தண்ணீர் அருந்தி மக்கள் வயிற்றை நிரப்பிய செய்தி கேட்டபோது, தானி அவற்றையெல்லாம் நம்பவேயில்லை. அடிவயிறை நீர் தொட்ட கணத்தில் அவளது கண்கள் கலங்கிப்போயின. அவள் இப்போது அதை நம்புகிறாள் என்பதற்கு அந்தக் கண்ணீர்தான் சாட்சி.

"கண்ணீர் பசியைப் போக்காது… கண்ணீரைத் துடை… எங்களோடு போருக்கு வா சகோதரி, ஊருக்கே உணவளிப்போம்… வருகிறாயா?” அந்தக் கூட்டத்தின் தலைவி கேட்டாள்.

"யாருக்கு எதிராய்ப் போர்?” கேள்விகளின் தேவதையின் விடை தெரியாக் கேள்வியின் எண்ணிக்கை ஒன்றாக உயர்ந்தது.

"எங்கள் எஜமானுக்கு எதிராக." தூரத்தில் ஒரு கோட்டையைக் காட்டினான் ஒருவன்.

“அவர் என்ன செய்தார்?” தானி தொடர்ந்து கேட்டாள்.

“எல்லாம் அவர்தான் செய்தார். கடந்த வருடத்தைவிட அதிகமாய்த்தான் உழைத்தோம். அதிகமாய் விளைந்தது. ஆனால் பஞ்சம் வந்து விட்டதாம் அதிக நட்டமாம். விளைச்சளில் ஊருக்கு வரவேண்டிய பங்கு வரவில்லை.” அமைதியாய் பதில் சொன்னாள் தலைவி.

“போர் வேண்டாம். வாருங்கள் போய்க் கேட்போம். இரக்கம் காட்டக்கூடும் அல்லவா?” தானியின் மென்மையான மனதின் வார்த்தைகள் உதிர்ந்தன.

சிரித்தான் ஒருவன். சிரித்தபடி தன் முதுகைத் திருப்பி வாள் கிழித்த காயத்தின் தளும்பினைக் காட்டிச் சொன்னான், “மரியாதையுடன் கேட்ட போது கிடைத்த கூலி. இரந்து பிச்சைக்காக போகவேண்டும் என்கிறாயா?”

நீண்ட நேரம் அமைதியாய் இருந்தாள் பதில்களின் தேவதை. அந்தப் பதினாறு பேரின் கண்களிலிலும் அவள் தனக்குத் தேவையான பதில்களைக் கண்டாள்.

"வாளா கோடரியா? எது இருக்கிறதோ அதையே தாருங்கள்" தானி எழுந்தாள்.

பதினேழாவது சகோதரியாக தானியையும் சேர்த்துக் கொண்டு போருக்கு போனார்கள். சகோதரர்கள் வாள்களைச் சுழற்றினார்கள். சகோதரகள் கோடரிகளை உயர்த்தினார்கள். சகோதரர்களது ஈட்டிகள் பாய்ந்தன. கோட்டைக் கதவு தகர்ந்தது, கோட்டையும் விழ்ந்தது, எஜமான் கைதியானார், தானியங்கள் நிரம்பிய களஞ்சியசாலை மக்களுக்கு சொந்தமானது.

போர் முடிந்தது.

மூட்டை பிரித்து கொஞ்ச தானியத்தை எடுத்து உணவு சமைத்து, தானியை உணவருந்த அழைத்தார்கள் சகோதரர்கள்.

“உணவு வேண்டாம், பதிலாக கைதியை மட்டும் ஒப்படையுங்கள் தண்டனையை நான் வழங்கிக் கொள்கிறேன்.” தானி தெளிவான ஒரு முடிவுடன் இருந்தாள்.

சகோதரியை அப்படியேயா பசியுடன் அனுப்பி வைப்பார்கள். கைதி, உணவு இரண்டும் தானியிடம் இப்போது.

தானி மீண்டும் வீட்டுக்கு வந்தாள். இந்த முறை கதவை மெதுவாக முட்டவில்லை. வாளால் தூள் தூளாக்கினாள். மின்மினிகள் கடவுளின் வீட்டுக்குள் படையெடுத்தன.

கடவுளின் அறைக்கதவும் கூட உடைக்கப்பட்டது. கடவுளின் அறையும் மின்மினிகளின் ஒளியால் நிறைந்தன.

“உங்களுக்கும் கண்கள் தெரியும் தந்தையே...” தண்டனைக்காக கைதியை இழுத்தபடி உள்ளே வந்தாள் தானி.

கடவுள் அறையைப் பார்த்தார். மின்மினிகளைப் பார்த்தார். தானியையும் கைதியையும் உற்றுப் பார்த்தவாறே எழுந்து வந்தார்.

“தந்தையே, என்னைப் படைத்தவரே… எதற்காக எனக்கு கண் தெரியாது என்று சொன்னீர்கள்? எதற்காக அப்படிப் பொய் சொன்னீர்கள்? பதில் சொல்லுங்கள் என் தந்தையே...” கைதியின் முன் மண்டியிட்டபடி கடவுள் தன் வாழ்நாளின் முதலாவது கேள்வியைக் கேட்டார்.

***

அந்த உலகத்தின் பெயர் இன்னமும் ஞாபகம் வரவில்லை. நீங்கள் அதைப் பூமி என்றே சொல்லிக் கொள்ளுங்கள். பிரச்சினை இல்லை.

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?