வாடிய கண்களுக்குள் பிறக்கிறது ஒளி

அந்தக் கண்கள் வெறித்து பார்த்தன
வாகனத்தின் ஒரு மூலையில்
முடங்கிக் கிடந்த சிறுவனின் கண்கள்
வெளியில் இருந்து நான் முறுவலித்தேன்
முறுவல் கொண்டான்
ஆயினும் கண்ணில் ஒளியில்லை

பத்து ஆசன வாகனத்தில் - ஈர்
பத்தாம் பிள்ளை அவன்
அமளிகள் மத்தியில்
ஒரு புத்தன் போல
ஞானம் கிடைக்கமுன்
புத்தனின் எப்படி இருந்தனவோ
அப்படியே இருக்கின்றன
அவனின் கண்கள்

ஒளி இழந்த கண்களால்
எதையோ தேடுகிறான்

சிலவேளை அவன்
பலதைத் தேடக் கூடும்
அமைதியை அவன் தேடியிருக்க வாய்ப்பில்லை
அமைதி சூழ்ந்த கணத்திற்கூட
கண்கள் ஒளிரவில்லை

அந்தப் புத்தன்
வேறெதையோ தேடுகிறான்

ஒருவேளை அத்தேடல்
அன்புக்கானதாயும் இருக்கலாம்
அவனைச் சூழ
அதுவும்தான் கொட்டிக்கிடக்கிறது.
நட்பாய் அது கரை புரள்கிறதே
பின் என்ன?

வெளியே மழையில் நனைந்தபடி
அந்தக் கண்களைப் பார்க்கும் எனக்கு
அந்தக் கண்களின் தவிப்பை
ஏன் உணரமுடியாது போனதில் வியப்பில்லை

ஓடி ஓய்ந்து நின்ற வாகனத்திலிருந்து
முதலாய் இறங்கி
மழையை அனைத்துக் கொண்டான்
கண்கள்மூடி ஒருகணம்
அப்படியே நின்றிருந்தான்
மறுகணம் நிமிர்ந்தான்
அகல விரிந்து வானம் பார்த்த கண்களில்
பிறந்தது அன்பின் ஒளி

-அதீதன்

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?