அந்தப் பொறியைப் பார்த்திருக்கிறாயா?


குரங்கு பிடிக்கும் வேடனைப் பார்த்திருக்கிறாயா நீ?
அவன் கையில் ஒரு குடைந்த தேங்காய் இருக்கும்
ஏன் என்று, என்றேனும் ஜோசித்திருப்பாயா?

பழுத்ததேங்காய் பொறுக்கி எடுத்து
பக்குவமாய் பொறி செய்வான்
உட்குடைந்து எல்லாம் எடுக்க - ஓரு
சிறு ஓட்டையோடு சிரட்டைகூடாய்
அது எஞ்சி நிற்கும்.

அந்தப் பொறியைப் பார்த்திருக்கிறாயா நீ?
மரத்தோடு அதைப் பிணைத்து - உள்ளே
பழங்கள் கொஞ்சம் போட்டுவைப்பான்.

அவ்வளவுதான் குரங்கு பிடிக்கத் தேவையான பொறி!

குரங்கு வரும்.
பழத்தைப் பார்க்கும்.
தன் விரிந்த கையை உள்ளேவிடும்.
பார்த்திருக்கிறாயா?

பழத்தை பொறுக்கி
இறுகப் பற்றி - மெதுவாகக்
கையை வெளியில் இழுக்கும்.
கை வெளியே வராது.
ஏன் என்று அறிவாயா நீ?

பழங்கள் கையில் இருக்கும் வரை,
கையை வெளியே வரவிடாத சின்ன ஓட்டை தேங்காயில்!
கடைசிவரை கைவிடாத பேராசை குரங்கிடம்.
வேடன் வந்தால் வேகமாய் இழுக்கும்
பழத்தை மட்டும் அது விடாது.

வேடன் வருவான் கயிறெடுப்பான்.
குரங்கு பிடிப்பான் போய்விடுவான்.

இப்போது சொல்,
குரங்குக்கு தேங்காய்;
உனக்கு என்ன?

-அதீதன்

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?