புத்தகங்களின் எதிரிகள்

இந்த உலகு புத்தகங்களின் எதிரிகளுக்குச் சொந்தமானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இது பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்டநாள் இருந்தது. இன்று எப்படியும் எழுதியாக வேண்டும் என்று அமர்ந்தே விட்டேன். இந்தப் பதிவை எழுதுவதற்கு இன்றைய நாளைவிட பொருத்தமான நாள் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. யாழ் நூலகம் தீயிடப்பட்ட கருப்பு  தினம். அதனாற்தான் இன்று இதை எழுதியே தீர்வது என்கிற முடிவுடன் எழுதுகிறேன்.

காலம் தோறும் புத்தகத்தின் எதிரிகள்தான் உலகை ஆண்டிருக்கிறார்கள். அது பற்றிப் பார்க்கும் முன்னர் எனது பார்வையில் புத்தகம் என்றால் என்ன என்பதைச் சொல்லவேண்டி இருக்கிறது. புத்தகம் ஆத்மார்த்தமானது, அது ஒரு அனுபவம் என்கிற அழகியல்வாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் வெளியே நின்று புத்தகங்களை நோக்குபவன் நான் (அதற்காக புத்தகம் குறித்த அழகியல் வாதக் கருத்துக்களை முற்றாக மறுப்பவன் அல்லன். புத்தகம் ஒரு அனுபவமும் தான்).  என்னைப் பொறுத்தவரை புத்தகம் என்பது ஒரு கருவி. ஒரு ஆயுதம். வாய்மொழிக் கதைகளுக்கு அடுத்ததாக மனிதனிடம் இருக்கும் சிறந்த தொடர்பாடல் ஊடகம் அது. புத்தகம் என்பது உலகின் ஒட்டுமொத்த அறிவும் சேமிக்கப்படும் ஒரு தொட்டி. இப்படித்தான் நான் புத்தகங்களைப் பார்க்கிறேன்.

புத்தகத்துக்கு எதிரிகள் இருகிறார்கள் என்பது அறிவுக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்பதன் நேரடி மொழிபெயர்ப்பே. அறிவுக்கு எதிரிகள் உலகில் இருக்கமுடியுமா என்கிற கேள்வி மிகவும் முக்கியமானது. வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது உலகின் எல்லாச் சமூகமும் இன்னொரு சமூகத்தின் அறிவை வளர்ப்பதற்கான உரிமையை எதோ ஒரு கால கட்டத்தில் மறுத்தே வந்திருக்கின்றன. இது உண்மையில் அதிகாரம் சார்ந்த பிரச்சினையாய் இருந்திருக்கிறது. அடிமைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அறிவுக்கான பாதை மறுக்கப்பட்ட வரலாறு எல்லா நாகரிகங்களுக்கும் சொந்தமானது. போர்களில் நூலகங்களை எரிப்பது எல்லா இடங்களிலும் நடந்திருக்கிறது. ஒரு ஒடுக்குமுறைச் சக்தி ஒடுக்கப்பட்ட மக்களின் அடுத்த தலைமுறையின் அறிவைக் குறிவைக்கிறது. அந்தக் குறியின் முதற் பலி நூலகங்களும் அதனுள் இருக்கும் புத்தகங்களும்.

அதிகாரவர்க்கம், ஒடுக்கப்பட்ட மக்களது கையில் இருக்கும் துப்பாக்கியை விட அவர்களின் கையில் இருக்கும் புத்தகங்களைக் கண்டே அதிகம் அஞ்சுகிறது.   புத்தகங்களின் வலிமையை ஒடுக்கப்பட்ட மக்களை விட ஒடுக்குபவர்கள் நன்கு அறிந்துவைத்திருகிறார்கள். வேதத்தை பிராமணர் அல்லாதவர் வாசிக்கக் கூடாது என்று சொன்னதுகூட இன்னொரு வகையான அதிகார ஒடுக்குமுறையே. 37 வருடங்களுக்கு முன்னர் யாழ் நூலக எரிப்பிற்குப் பின்னாலும் அதிகாரம் என்கிற ஒன்றுதான் காரணமாக அமைந்தது. அதிகாரத்தின் கோரமுகங்களில் இதுவும் ஒன்று.

அதிகாரம் மட்டுமா புத்தகங்களின் எதிரி என்று கேட்டால், அதற்கான பதில் இல்லை என்பதுதான். கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

நூலகங்களை சட்டவிரோதமானதாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதை நீங்கள் ஒரு வேளை அறியாமல் இருக்கக் கூடும். அப்படி ஒரு முயற்சி சில காலங்களாக பெரும் பதிப்பகங்களால் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு புத்தகத்தை விலைகொடுத்து வாங்கி ஆயிரக் கணக்கானர்வர்களுக்கு படிப்பதற்கு கடனாக வழங்குவது அநியாயமானது, இதனால் தங்களது விற்பனை சரிகிறது, கஷ்டப்பட்டு எழுதும் ஒரு எழுத்தாளனுக்கு அவனது உழைப்புக்கான சரியான ஊதியம் கிடைக்காமல் இருப்பதற்கு நூலகங்கள் ஒரு காரணமாகின்றது என்கிற ஒரு வாதம் அண்மைக்காலங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இலாபம் என்ற ஒற்றை சொல்லை அறமாக்க நினைக்கும் முதலாளித்துவம் அறிவு சார் பொருளாதாரத்தில் இலாபம் சம்பாதிக்க முற்படாமல் இருக்கப்போவதில்லை. காப்புரிமை என்பதும் புலமைச் சொத்துரிமை என்பதும் அறிவு சார் பொருளாதாரத்தின் இலாபத்தை குறையவிடாமல் காக்க முதலாளித்துவம் கண்டுபிடித்த இரண்டு சட ரீதியான ஆயுதங்கள்.

அண்மையில் வாங்கிய ஒரு புத்தகத்தில் "நீங்கள் வாங்கிய இந்தப் புத்தகத்தை நீங்கள் மாத்திரமே வாசிக்க வேண்டும். இதனை நீங்கள் யாருக்கும் வாசிப்பதற்காக கடனாக வழங்கவோ, பகிரவோ, மீள்விற்பனை செய்யவோ கூடாது. அப்படிச் செய்வதாயின் பதிப்பாளரின் சம்மதம் எழுத்துவடிவில் பெறப்படவேண்டும்." என்கிற தொனிப்பட காப்புரிமையை உறுதி செய்வதற்கான வசனங்களாக அவை அச்சிடப்பட்டிருந்தன.  என்னை கேட்டால் காப்புரிமைதான் அறிவின் முதல் எதிரி என்பேன். ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு உழைப்பின் பயனான மொழியின் மேல் ஏறி நின்று ஒட்டுமொத்த சமூகமும் வழங்கிய அறிவினைப் பயன்படுத்தி உலகினைப் பார்த்துவிட்டு அதன்மூலம் தான் கண்டடைந்ததை மாத்திரம் தனிச்சொத்தாகப் பாவனை செய்தல் மானிட இருப்புக்கு விரோதமானது.

சாதாரண புத்தகங்களின் நிலைமை இப்படியிருக்க துறைசார் ஆக்கங்களின் (புத்தகங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள்) நிலைமை வித்தியாசமானதாக இருக்கிறது. அதிக விலை மட்டும் வேலியாக நிற்கவில்லை. இன்றைய நிலையில் துறைசார் ஆக்கங்கள் பெரும்பாலும் இணைய நூலகங்களுக்கு ஊடாகவே பெறப்பட வேண்டிய சூழல் இருக்கிறது. அதுவும் ஆய்வுக் கட்டுரைகளைப் பொறுத்த வரையில் அதிகம். உண்மையில் இந்த இணைய தளங்களை நூலகங்கள் எனச் சொல்வதைக்காட்டிலும் புத்தகக் கடை என்பதுதான் பொருந்தும். இலகுவாக குறைந்த பொருட்செலவில் பெருமளவு மக்களிடம் ஒரு ஆக்கத்தை கொண்டு செல்லும் வாய்ப்புகளைக் கொண்ட இணையத்தின் கதவுகளின் பின்னால் இந்த ஆக்கங்கள் அதிக விலை கொடுத்து குறைந்த பயனர்களால் மாத்திரமே அணுகக்கூடிய வகையில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றன. 

ஒரு எழுத்தாளரின் உழைப்புக்கான ஊதியம் என்பதை எல்லாம் தாண்டி இன்றைய பதிப்புலகு எங்கோ சென்றுவிட்டது. அதற்கு எழுத்தாளர்கள் பற்றிக் கிஞ்சித்தும் கரிசனை கிடையாது. அதற்கு வேண்டியதெல்லாம் இலாபம் மாத்திரமே. இலாபம கிடைக்குமாயின் பதிப்புத்துறையில் ஏகபோகம் செய்ய விரும்பும் ஒரு நிறுவனத்தினால் ஏற்பாடு பிரச்சினைகள் பற்றி அந்த நிறுவனமே புத்தகத்தை வெளியிடும். முதலாளித்துவத்துக்கு எல்லாத் துறைகளிலும் ஒரே முகம்தான்.  

அண்மையில் ஒரு மக்கள் போராட்டத்தில் இருக்கும் நியாயங்களை அலசிப்பார்க்கும் நோக்கில் இலங்கையில் மயானங்கள் தொடர்பான சட்டங்கள் என்ன சொல்கின்றன என்பதை தேடிக்கொண்டிருந்தேன். அதற்கான சட்டத்தின் மின்பிரதி இருக்கும் இணைய தளத்தை பார்த்துவிட்டபோதும் அச் சட்டத்தை வாசிக்க வேண்டுமாயின் அந்த இணைய தளத்தில் சந்தா இருக்கவேண்டிய சூழல். புத்தகங்களாக அச்சிடும் செலவுடன் ஒப்பிடும்போது மிகச்சிறியதான செலவின் மூலம் அரசாங்கத்தால் மக்களிடம் அனைத்துச் சட்டங்களின் மின்வடிவையும் கொண்டு சேர்க்க முடிகிறபோதும் அரசு அதனை செய்திருக்கவில்லை. இது இங்கு மட்டுமல்ல தொழிநுட்ப தரங்களை நிர்ணயம் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கும் நாடுகளின் அரசுகளும் அவற்றை செய்ய முன்வருவதில்லை. அரசுகள் மக்களுக்குத் தேவையானதை செய்யவேண்டிய அமைப்பு என்கிற சிந்தனையை எல்லாம் முதலாளித்துவம் தகர்த்து எறிந்து பல காலம் ஆகிறது.

இந்த இணைய நூலகங்களும் இணைய புத்தகக் கடைகளும் வாசகருக்கும்  நூலுக்கு இடையில் இருந்த உறவினை நிறையவே மாற்றியிருக்கின்றன. நீங்கள் ஒரு புதிய ஊருக்கு செல்கிறீர்கள், ஒரு புத்தகக் கடையைக் காண்கிறீர்கள், உள்ளே சென்று உங்களுக்கு பிடித்த நூல் ஒன்றை வாங்கிவிட்டு உங்களைப்பற்றி விபரங்கள் எதையுமே சொல்லாமல் நீங்கள் வந்துவிடமுடியும். புத்தகத்தை வாசிப்பதற்கான உங்களுடைய உந்துதலுக்கு உங்களுடைய அடையாளம் உங்களுக்குத் தேவையில்லை. அதே போலவே ஒரு நூலகத்துக்குள் போய் ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்துவிட்டு மீளவும் அங்கேயே வைத்துவிட்டு வர உங்களுக்கு உங்களது அடையாளம் தேவையில்லை. நீங்கள் எந்தவித அடையாளமும் இல்லாது வாசகனாக மாத்திரம் புத்தகத்தை அணுகமுடியும் என்ற உறவும் உரிமையும் உங்களுக்கும் புத்தகத்துக்கும் இடையில் இருந்தது. இந்த உறவை மாற்றியிருக்கின்றன இன்றைய இணையப் புத்தகக் கடைகள் மற்றும் இணைய நூலகங்கள். ஏதோவொரு அடையாளத்தை நீங்கள் தாங்கித்தான் அந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்க/படிக்க கூடியதாக இருக்கிறது.

இப்படிக் கண்ணுக்குத் தெரியாத வேலிகள் புத்தகங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையில் முளைத்துக் கொண்டே வருகின்றன. முளைக்கும் ஓவ்வொரு வெளியும் நாட்கள் செல்ல செல்ல மதில்கள் ஆகி, பின்னர் அகழிகள் ஆகி, கடைசியில் நீந்திக்கடக்கமுடியா சமுத்திரமாகி வாசகனை நிரந்தரமாக நூல்களிடமிருந்து பிரிக்க வல்லது. வாசகனிடம் பணம் இருக்கிற போதினில் மாத்திரம் ஒரு படகை வாடகைக்கு எடுத்துச் சென்று புத்தகங்களை வாசித்து விட்டுத் திரும்பும் துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தவும் வல்லது. அதிகாரமும் இலாபமும் அதற்கு அடிபணிந்து கிடக்கும் தொழிநுட்பமும் புத்தகத்தின் எதிரிகளாக வாசகர்களை சுற்றிக் கொண்டிருக்கின்றன.

புத்தகங்களை அவற்றின் எதிரிகளிடம் இருந்து காக்கும் கடமையும் வாசகர்களை சுற்றித்தான் இருக்கிறது என்பதையும் மறவாதீர்கள்.

- அதீதன்

Comments

Post a Comment

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?