ஆரோன் சுவாட்ஸ்: இணையச் சுதந்திரத்தின் குறியீடு

"போராட வீதிக்கு இறங்கும்போதும் போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பும்போதும் யாருடைய கண்களுக்கும் புலப்படாத, யாருடைய காதுகளுக்கும் கேட்காத வலுவற்ற மனிதர்களாக எங்களை நாங்களே எண்ணிக்கொள்வது மிகவும் எளிதானது. ஆனால் நான் இன்று சொல்கிறேன் நீங்கள் மிகவும் பலமானவர்கள். வீதிக்கு இறங்கினால் உங்களால் இந்தச் சட்டத்தை தடுக்க முடியும்" இணையத்தில் இடம்பெறுகின்ற காப்புரிமை மீறல்களை கட்டுப்படுத்தல் எனும் பெயரில் அமெரிக்க அரசாங்கம் கொண்டுவரவிருந்த 'இணையவழித் திருட்டை தடுக்கும் சட்டம்' என்கின்ற SOPA சட்டத்தை எதிர்த்துப் போராட மக்களை அழைக்கும் போது ஆரோன் சுவாட்ஸ் கூறிய வசனங்கள் இவை. ஆம், ஆரோன் சுவாட்ஸ் இணையத்தின் சொந்தப் பிள்ளை என அழைக்கப்பட்ட ஒரு போராளி. சுதந்திர இணையத்தையும் அறிவு என்னும் பொதுச் சொத்தையும் பாதுகாப்பதற்காக போராடி மடிந்த ஒரு போராளி.

இறக்கும்போது ஆரோனுக்கு 26 வயது. அந்த 26 ஆண்டுகால வாழ்நாளில் அரைவாசியை அவன் ஒரு செயற்பாட்டாளனாகக் கழித்திருக்கிறான். 14 வயதில் இருந்தே இணையத்துக்காக பங்களிக்கவும் குரல் எழுப்பவும் தொடங்கினான் ஆரோன். இணையத்துக்காக எத்தனையோ மென்பொருட்களை கூட்டாகவும் தனியாகவும் எழுதி இருக்கிறான். RSS செய்தியோடை வடிவமைப்பில் பங்களிப்பு செய்ததில் தொடங்கி படைப்பாக்கங்களை பொதுச் சொத்தாகப் பகிர உதவும் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமம் என்கின்ற Creative Commons License க்குப் பின்னால் இருக்கின்ற நிரல்களை எழுத உதவியது வரை இணையத்தின் வளர்ச்சியில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்திருக்கிறான் ஆரோன். வலைத்தள நிரல்களை எழுதுவதற்கான Markdown எனும் கணினி மொழி உருவாக்கத்தில் பங்களிப்பு, இணையத்திற்கான நியமங்களை உருவாக்குவதில் பங்களிப்பு, இன்னும் பல இணையச் சேவைகளை வழங்குவதிலும் அவனது பங்களிப்பு எனப் பெரும் பட்டியலுக்கு சொந்தக்காரன்.

நிரல்களை எழுதுவதோடு நின்றுவிடவில்லை அவனது பங்களிப்பு. உண்மையில் சொல்லப்போனால் ஒரு  நிரலாளன் என்பதைத் தாண்டி அவன் ஒரு செயற்பாட்டாளன். அவனது எழுத்துக்களும் அவனது சிந்தனையும் செயற்பாட்டுத் தளத்திலேயே அதிகம் இருந்தது. சுதந்திர இணையத்துக்கான கோட்பாட்டு உருவாக்கத்திலும் உருவாக்கிய கோட்பாடுகளை செயற்படுத்துவதிலும் அதிகம் கவனம் செலுத்தினான். இந்த உலகம் ஏன் இவ்வாறு இருக்கிறது, ஏன் இவ்வாறு இல்லை என்ற கேள்விகளை தனக்குள்ளேயே கேட்கத் தொடங்கினான். சமூக பொருளாதார அரசியல் தத்துவங்கள் இணையும் புள்ளியில் அவனுக்குரிய பதில்கள் கிடைத்தன. அவனது கேள்விகளும் அவனது தேடல்களும் அறிவு தனிச்சொத்து இல்லை, அது இந்த உலகத்தின் ஒட்டுமொத்த உழைப்பின் திரட்சி என்று முடிவுக்கு அவனை அழைத்து வருகிறது. காப்புரிமை என்ற பெயரில் சமூகப் பொதுவுடைமையான அறிவு, முடக்கப்படுவதை அவன் அவதானிக்கிறான். மனிதகுல வளர்ச்சிக்குப் பயன்படவேண்டிய ஆய்வுக் கட்டுரைகளும் இன்னும் பல புலமைசார் ஆவணங்களும் இலாப நோக்கில் பணத்தால் மட்டுமே திறக்கப்படக் கூடிய இணைய நூலகங்களின் கதவுகளின் பின்னால் அடைக்கப்பட்டுக் கிடக்கும் நவீன முதலாளித்துவ யதார்த்தம் அவனுக்குள் மேலும் கேள்விகளைத் தோற்றுவிக்கின்றது. அவனுக்குள் ஓர் அறச்சீற்றம் எழுகிறது.

அறிவை முடக்கும் இந்த பொறிக்கிடங்குகள் மீது உண்டான கோபம் அவனது எழுத்துக்களிலும் செயற்பாடுகளிலும் வெளிவரத் தொடங்கின. எத்தனையோ இணையப் பூட்டுகளின் பின் முடங்கியிருந்த இலட்சக்கணக்கான ஆவணங்களை, மக்களின் பயன்பாட்டுக்காக பூட்டை உடைத்து வெளியே கொண்டு வருகிறான். அறிவை மீளவும் பொதுவுடைமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பலருடன் சேர்ந்து இயங்குகிறான். அவனால் பொது வெளிக்கு கொண்டுவரப்பட்ட புத்தகங்களதும் ஆய்வுக் கட்டுரைகளதும் ஏனைய ஆவணங்களதும் எண்ணிக்கை பல இலட்சங்களைத் தாண்டுகிறது. 2008 இல் மாத்திரம் சுமார் 2.7 மில்லியன் அளவான, நீதிமன்றத் தீர்ப்பு சார்ந்த ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வருகின்றான். சட்டப்படி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவேண்டிய ஆவணங்கள் அவை. அந்த ஆவணங்களின்  மின்பிரதிகள் கூட  இலவசமாக அல்லாமல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே பெற முடியும் என்று இருந்த நிலைமையால் அவன் அவ்வாறு செய்ய வேண்டிவந்தது. மக்களது பணத்தில் எழுதப்பட்ட, மக்களுக்குச் சொந்தமான தீர்ப்பின் ஆவணங்கள் பணம் என்னும் வேலிகளுக்குப் பின்னால் இருந்தமைதான் ஜனநாயக விரோதமான செயலே தவிர, அதை மக்களிடம் கொண்டு செல்லும் வேலை அல்ல. அது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு முயற்சியே தவிர வேறில்லை.

தகவற் சுதந்திர மறுப்பும் சுதந்திர இணையத்துக்கான கட்டுப்பாடுகளும் மனித குல வளர்ச்சிக்கு முரணானவை என்பதை அவன் தீர்க்கமாக நம்பியிருந்தான். ஆரோனின் திறமையை ஒத்த திறமை கொண்ட எத்தனையோ இளைஞர்கள் அந்தத் திறமையை கோடிகளில் பணத்தை சம்பாதிப்பதற்காக செலவிட்ட வேளையில், ஆரோன் தன் திறமைகளை இணையத்தின் விருத்திக்காக செலவிட்டான். அமெரிக்காவின் அரசியலை மிக ஆழமாக அவன் அறிந்து இருந்தான். போலி ஜனநாயகப் பாதையில் இருந்து அதனை மீட்கும் புரட்சிகர அரசியற்பாதையில் நடந்து செல்லவே அவன் விரும்பினான்.

அவனது செயற்பாடுகள் தினம் தினம் விரிவடைந்தது. 2010 இல்,  JSTOR என்கின்ற இணைய நூலகத்தில் இருந்து புத்தகங்களை பெருவாரியாக தரவிறக்கம் செய்தபோது MIT பொலிசாரால் கைது செய்யப்படுகிறான். பல்வேறு சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் பல குற்றச்சாட்டுகள் அவன் மீது சுமத்தப்படுகிறது. கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்திருந்த காலத்திலும் அவனது போராட்ட குணம் மாறவே இல்லை. இணையவழித் திருட்டைத் தடுக்கும் சட்டம் என்ற பெயரில் தகவற் சுதந்திரத்திற்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர இருந்த SOPA சட்டத்தை அவனும் அவன் தொடக்கிய Demand Progress என்ற அமைப்பும் எதிர்த்துப் போராடினர். மக்களைத்திரட்டி வீதியிலிறங்கிப் போராடி வென்றனர். இதன் நடுவே வழக்கும் நடந்துகொண்டுதானிருந்தது. JSTOR இடையிலேயே வழக்கிலிருந்து விலகிய போதும்கூட அரசதரப்பு, வழக்கை கைவிடாது முன்னெடுத்தனர். ஒரு மில்லியன் டாலர் தண்டப்பணமும் 35 ஆண்டுகால சிறைத்தண்டனையும் தீர்ப்பாக வர இருந்த நிலையில், குற்றத்தை ஒப்புக் கொள்ளுவதன் மூலம் தண்டனையைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையை ஆரோனின் வழக்கறிஞர் முன்வைக்கிறார். ஆனால் ஆரம்பம் முதலே ஆரோனை கடுமையாகும் தண்டிப்பதன் மூலம் உலகுக்கு ஒரு செய்தியைச் சொல்ல கங்கணம் கட்டிக்கொண்டிருந்த அரசதரப்பு, எந்த விட்டுக்கொடுப்பும் செய்ய முடியாது என மறுக்கிறது.  உயர்ந்த பட்ச தண்டனையாக 35 ஆண்டு காலம் சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டிருந்த ஆரோன் 2013 ஜனவரியில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்கின்றான்.

இன்றுவரை இணைய உலகம், கொடூர முதலாளித்துவத்தின் கொலையாகவே அதனைப் பார்க்கிறது. இணையத்தின் சொந்த மகன் சுதந்திர இணையத்திற்காக, தகவல் சுதந்திரத்திற்காக போராடி மாய்ந்தான். உலகம் முழுதும் கொண்டாடுகின்ற இணைய ஜாம்பவான்கள் அத்தனை பேரும் கொண்டாடிய ஓர் இளைஞன் அவன். இளைஞர்களை அரசியல் போராட்ட பாதையில் அழைத்து வரக்கூடிய ஓர் ஈர்ப்பு சக்தி அவனிடம் இருந்தது. அதுவே SOPAவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களை அதன்பால் ஈர்த்தது. தாங்கள் பலவீனமானவர்கள் என நம்பிக் கொண்டிருந்த பல்லாயிரம் இளைஞர்களை பலம் வாய்ந்த அரசுக்கு எதிராகத் திரட்ட முடிந்தது. தேர்ந்த அரசியல் ஞானமும் செயற்படும் திறனும் இருந்த எத்தனையோ ஆளுமைகளை கொல்லப்பட்ட அதே வழியில் தான் ஆரோனும் கொல்லப்பட்டிருக்கிறான். இறந்தாலும், அந்த ஆளுமைகளைப் போலவே போராட்ட உணர்வையும் சுதந்திர வேட்கையையும் பல்லாயிரம் இளைஞர்கள் மனதில் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறான் ஆரோன்.  இணையச் சுதந்திரத்தின் குறியீடான ஆரோன்; அடங்காமையின் குறியீடான ஆரோன்; சமூக ஒத்துழையாமையின் குறியீடான ஆரோன் எங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், எக்காரணத்திற்காகவும் சுதந்திரத்தைப் பறிக்க எவரையும் அனுமதிக்காதீர்கள் என்பதுவே அது.

-அதீதன்

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?