விமான உரையாடல்கள்

குறிப்பு: இது நான் எழுதிய கதை அல்ல. தங்கை தான் பார்த்த காணொளியொன்றைப் பற்றி என்னிடம் சொன்னபோது சில மாற்றங்களோடு கதையாக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதன் வெளிப்பாடே இக்கதை.

******

விமானத்துக்குள் ஏறிய பின்னரும் கையில் புத்தகத்துடனேயே இருந்தாள் அந்தப் பத்து வயது சிறுமி. அவளுடைய பெயர் ஆருதி. ஒரு கருத்த அட்டைப் புத்தகம் அது. அவள் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்ததால் புத்தகத்தின் முன்னட்டையைப் பார்க்க முடியவில்லை. ஒரு பெரிய புத்தகம் என்பது மட்டும் தெளிவாய் தெரிகிறது.

நீண்ட நேரம் காலியாக இருந்த இருக்கையில் ஒரு முதியவர் வந்து அமர்ந்தார். அவரது பெயர் முக்கியமானதல்ல. வயது அறுபதுக்கும் மேல். இந்த விளக்கம் இப்போதைக்குப் போதும்.

விமானம் ஓடுபாதையில் இருந்து எழுந்து பறக்கத்தொடங்கிவிட்டது.

நீண்ட நேரம் அமைதியாய் இருந்தவர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.

"என் பெயர் '......', நான் '......' மதத்தின் மதகுரு" என்றார்.

ஆருதி அப்போதும் புத்தகத்திலேயே மூழ்கிக்கிடந்தாள். பெரியவர் மீண்டும் முயற்சித்தார். மெதுவாக இருமியவாறு, "உங்களிடம் தான் பேசினேன்" என்றார்.

புத்தகத்தை கொஞ்சம் கீழிறக்கித் திரும்பிப் பார்த்தவள், "மன்னித்துவிடுங்கள், புத்தகத்துள் மூழ்கியிருந்தேன்" என்றாள்.

புன்னகைத்தவாறே, "என் பெயர் '......', நான் '......' மதத்தின் மதகுரு" என்றார் மீண்டும்.

"நான் ஆருதி, கோபித்துக் கொள்ளாதீர்கள் புத்தகம் ஆர்வமூட்டுகிறது நான் வாசித்து விட்டு வருகிறேன்" என்றாள்.

கொஞ்சம் ஏமாற்றம் இருந்தாலும் பத்து வயதுச் சிறுமி இவ்வளவு பக்குவமாய் பதில் சொன்னதை அவர் எதிர்பார்க்கவில்லை. நல்ல புத்தகங்களைப் படிக்கிற சிறுமியாக இருப்பாள் போலும் என எண்ணிக் கொண்டு  மௌனமாய் இருந்தார். இவருக்கு நேரமே போகவில்லை. மீண்டும் கதை கொடுத்தார்.

"பயணங்களில், புதிய நபர்களோடு கதைப்பது ஒரு புத்தகத்தை வாசிப்பதைக் காட்டிலும் நல்ல அனுபவம்" என அவளுக்கு கேட்கும்படி முனுமுனுத்தார்.

இவர் சும்மா இருக்கப்போவதில்லை எனப் புரிந்த ஆருதி புத்தகத்தை மெதுவாக மூடிவிட்டு, "உண்மைதான் இந்தப் புத்தகம் எங்கும் போகப் போவதில்லைதான், நாங்கள் கதைப்போம்" என்றாள்.

"நன்றாகக் கதைக்கலாம்" என்றார்.

"எதைப்பற்றிக் கதைக்க விரும்புகிறீர்கள்"

"கதைப்பதற்கா விடயங்கள் இல்லை. எதைப்பற்றி வேண்டுமானாலும் கதைக்கலாம். வேண்டுமானால், எல்லாவற்றையும் விட பிரம்மாண்டமான கடவுளைப் பற்றியும் அவர் படைத்த உலகத்தைப் பற்றியும் கதைப்போமா? பயணம் முடிந்தபின்னும் கதைப்பதற்கு நிறைய மீதமிருக்கும்." சிரித்துக்கொண்டு சொன்னார் மதகுரு.

"அப்படியானால் எனது முதலாவது சந்தேகத்தைக் கேட்கிறேன், பதில் சொல்லுவீர்களா?"

"கடவுள் பற்றிய சந்தேகத்தை தீர்ப்பதுவே என் கடமை"

ஆருதி தன் சந்தேகத்தை கேட்கத் தொடங்கினாள். "ஒரு வனத்தில் குறைந்தது ஆயிரம் வகையான விலங்குகளாவது இருக்கும். அதில் இலை குழைகளை உண்ணும் மிருக இனங்கள் பல இருக்கும். நாங்கள் உதாரணத்துக்கு ஒரு நான்கு இனங்களை எடுத்துக் கொள்வோம், யானை, மாடு, மான், மரை. அவை அனைத்தும் ஒரே வனத்தின் இலை குழைகளையே உண்கின்றன. சில சமயங்களில் ஒரே வகையான தாவரத்தின் இலைகளையோ புற்களையோ கூட சாப்பிட இடமிருக்கிறது அல்லவா? ஆனாலும் மாடு சாணமிடுகிறது, யானை லத்தி இருகிறது. மான் மரை ஆகியவை வெவ்வேறு வடிவில் தமது கழிவுகளை அகற்றுகின்றன. எளிமையாகச் சொன்னால் ஒரே உணவை உண்ணும் ஒவ்வொரு விலங்கின் 'கக்காவும்' ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. இந்தக் 'கக்கா'வின் வடிவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று தனது சந்தேகத்தை நீண்ட வசனங்களால் கேட்டாள்.

உண்மையில் அவர் இதனை எதிர்பார்க்கவில்லை. சற்று நிதானித்து, "இது உயிரியல் சார்ந்த கேள்வி போலுள்ளது, எனக்கு அது தெரியாது" என்றார்.

இந்தப் பதிலை எதிர்பார்த்தாள் போலும், சிரித்துக்கொண்டே சொன்னாள், "கண்ணுக்கு தெரியும் 'கக்கா'வைப் பற்றியே பதில் தெரியாத நீங்களா கண்ணுக்கே தெரியாத 'கடவுள்' பற்றி எனக்கு சொல்லப் போகிறீர்கள்"

எந்த பதிலும் எதிர்பாராதவள், மூடியிருந்த புத்தகத்தை திறந்தாள். அப்போதுதான் தெரிந்தது முதற்ப் பக்கத்தில் ஈ.வெ.ரா பல்லிளித்துக் கொண்டிருந்தது.

- அதீதன்

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?