இசையும் இளந்தளிரும்


இசை இப்போதுதான் இயற்கையை ரசிக்கப் பழகிக்கொண்டிருந்தான். அவன் இன்னும் மழலை மாறாதவன். ஒரு பசுந்தளிர். மூன்றே வயது. அவன் பிறந்ததில் இருந்தே மரங்களுடனும் மலர்களுடனும்தான் வளர்ந்தான். அவனது புருவங்களின் அருகே வைக்கப்பட்ட திருஷ்டி இலைகள் தொடக்கி அவன் வருடும் செம்பருத்திப் பூ வரை, அவனைச்சுற்றி இயற்கை நிறைந்திருந்தது. வாடிய பூக்களை வருடி உயிர்கொடுப்பான். வளைந்து விழும் சிறு செடி நிமிரும்வரை அதை தாங்கிப் பிடித்தபடி நிற்பான். இயற்கையின் வண்ணத்தில் சேர்ந்த புது வண்ணம் அவன்.

சூழ எது இருக்கிறதோ அதையே பார்த்துக் குழந்தைகள் வளர்வதாய்ச் சொல்வது எவ்வளவு உண்மை. இயற்கையைக் காதலிக்கும் நபர்கள் சூழ அவன் வளர்ந்தான். இயற்கையை வெறும் வளமாகவும் ரசனைப் பண்டமாகவும் பார்க்கும் உலகில் இயற்கை அன்புக்காய் ஏங்குவதைக் காண்கின்ற கண்கள் வெகு குறைந்துவிட்டன. இசையினுடைய கண்களும் அப்படியானவையே.

அவன் பிறந்ததிலிருந்து அவனது பிஞ்சுக் கைகளைப்பிடித்து நாட்டப்பட்ட மரங்கள் ஏராளம். அவன் நடக்கத்தொடங்கிய வயதிலேயே தன் பிஞ்சுக் கைகளால் ஒரு குட்டிக் கோப்பையில் தண்ணீரை எடுத்து குடுகுடுவென ஓடிப்போய் அந்தச் செடிகளுக்கு தண்ணீர் உற்றுவான். கொண்டுபோகும் தண்ணீரில் பாதி வழியிலேயே சிந்திவிடும். அவன் சிந்தும் தண்ணீரைக் குடிக்க நிலமும் காத்திருக்கும். 

ஒரு பூவைக் கூடக் பறிக்க அவன் அனுமதிக்க மாட்டன். அருகில் அமர்ந்து மணிக்கணக்கில் கதைபேசுவான். இசை ஒரு அற்புதமான குழந்தை.

**********************************

ஒரு காலைப் பொழுதில் கண்விழித்தவன், தாயைத் தேடி முற்றத்துக்கு வந்தான். முற்றத்தில் இருந்த வாங்கில் அட்டைகளைப் பரப்பி எதையோ எழுதிக் கொண்டிருந்தனர் தாயும் தந்தையும்.

“என்ன செய்றிங்க” என்றவாறே அருகில் வந்தான்.

தந்தை அவனைத் தூக்கி மடியில் வைத்தார். போராட்டத்துக்கு பதாதைகள் எழுதுவதை அவனுக்கு எப்படி விளக்குவது என அவர்களுக்குத் தெரியவில்லை. போராட்டம் என்றால் என்னவென்றே விளங்கப்படுத்த முடியாத அளவு சிறுவனாய் இருக்கும் இவனுக்கு நிலக்கரி அனல் மின்நிலையத்தை அவர்கள் எதிர்க்கப் போவதை சொல்வதற்கு வாய்ப்புத் துளியும் இல்லை.

இசை திரும்பவும் கேட்டான், “என்ன செய்றிங்க?”

தாய்க்கு ஒரு யோசனை வந்தது. தயாரித்திருந்த ஒரு பதாகையை கையில் எடுத்தாள். அட்டையோடு பிணைத்திருந்த தடியை இறுக்கிப்பிடித்து பதாகையை உயர்த்தினாள். “இயற்கைக்காய்ப் போராடுவோம், இறுதிவரை போராடுவோம்” என்று கோஷமிடத் தொடங்கினாள். போராட்டம் என்றால் என்னவென்பதை விளக்கமுடியாத அவனுக்கு போராட்டத்தை நடத்திக்காட்டினாள்.

அவளையும் பதாகையையும் மாறி மாறிப் பார்த்தான். பதாகையில் வரையப்பட்டிருந்த மரம் அவனது கண்களை ஈர்த்தது. தாயின் சொற்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியாதவனுக்கு, அந்த மரம் மட்டும் புரிந்தது. மெதுவாக தந்தையின் மடியில் இருந்து இறங்கினான். குடு குடுவென வீட்டின் பின்புறம் ஓடினான். வெட்டிப் போடப்பட்டிருந்த ஒரு நீண்ட மரவள்ளித் தடியுடன் ஓடிவந்தான். சிறிய இளந்தளிர்களுடன் இருந்த மரவள்ளித் தடியை தாயிடம் நீட்டினான். அவர்களுக்குப் புரியவில்லை.

“என்ன கண்ணா?” என்றாள் தாய்.

பதாகையில் ஒட்டியிருந்த தடியைக் காட்டினான். மீண்டும் தன் கையில் இருக்கும் தடியைக் காட்டினான். “இது பெருசு...” என்றான். இளம்தளிர்களைத் தாங்கியிருந்த அந்த மரவள்ளிக் கம்பு அந்தப் பதாகைக்கு கோடி அர்த்தங்களை சேர்க்க வல்லது. ஆனால் அவனுக்கு அது எதுவுமே தெரியாது. இசையைப் பொறுத்தவரை பதாதையில் கூட, மரம் உயர்ந்துதான் இருக்கவேண்டும்.

தடியை தாயிடம் கொடுத்துவிட்டு மரங்களுடன் பேசச் சென்றுவிட்டது அந்த அற்புதம். இசை என்கிற இந்த இளம்தளிர் வெறுமனே இயற்கையை ரசிக்கப்போகும் ஒருவனாக வளரப்போவதில்லை. அவனுக்குள் போராட்ட விருட்சம் இன்று துளிர்த்திருக்கிறது.

இந்தப் பிஞ்சுக் கைகளுக்காத்தானே இந்தப் போராட்டங்கள் எல்லாமே. “எல்லாக் காலத்திலும் பிஞ்சுகளின் கைகளில் மலர்கள் இருக்கவேண்டும்” என்று அடுத்த பதாதையை எழுதத் தொடங்கினார்கள் இசையைப் பெற்றவர்கள்.

-அதீதன்

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?