பொய்கள் உதிர்க்கும் புத்தன்

எனக்குப் பிடிக்காதவொரு புத்தனை
எனது மேசையில் வைத்திருக்கிறேன்.

இரண்டங்குல உயரம்
பழுப்பு வண்ண உடலை
உலோக வண்ணத் துணியால் போர்த்திய
ஒரு சிறிய புத்தன்.
 அமர்ந்தபடி
அமைதிசூழந்த கண்களின் கீழே
புன்னகை பூக்கும் உதடுகளால்
கதை பேசும்
எனக்குப் பிடிக்காத
என் மேசைப் புத்தன்

கதை பேசும் உதடுகளால்
தினமும் பொய் பேசுகிறான் என்னிடம்.
அமைதி தொலைந்து
மேசைமுன் அமரும் என்னிடம்
அவன் சொல்லும் அந்தப் பொய்கள்
கொடுமையானவை.

"பற்றற்றிரு... அமைதி காண்பாய்"
"அமைதியை உள்ளே தேடு..."
"கர்மா... நீதான் காரணம்..."
புன்னகையுடன்
இத்தனை வலிமிகு
சொற்களைச் சொல்ல
அவனால் எப்படி முடிகிறதோ

உலகென்றொன்று இருப்பதையும்
ஒடுக்குமுறைகள் நடப்பதையும்
ஒரு சொல்லாலும் சுட்டாது
என்னை பற்றறிருக்க சொல்லுகிறான்
கண்களை என்றைக்கும் திறந்திராத
என்னை என்றுமே கண்டிராத
என் மேசைப் புத்தன்.

நல்லவேளை அவன் வெறும்
புத்தனாய்ப் போனான்.
பொய்களை உதறி என்னால்
என்னால் நடக்க முடிகிறது.
என் மேசைப் புத்தன்
புத்தபெருமானாய் போயிருந்தால்...

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?