ஒலிவாங்கிகளை அருகில் இருக்கும் பெண்களிடம் கொடுங்கள்.

பெண்களுக்கு எதிரான குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்கிற அறிமுகத்துடன் ஒரு குறும்படம் கண்ணில் பட்டுத்தொலைத்தது. Behindwoods இன் Your Shamefully என்கிற தலைப்பிடப்பட்ட சுமார் 40 லட்சம் பேர் பார்த்த படம்.

"பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துக் கொல்வதற்கு இன்று நாங்கள் தவறினால், வரும்காலத்தின் குடும்பங்கள் பெண்குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை நிறுத்திவிடுவார்கள். அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் பெரிய மனதுடைய குடும்பங்கள் மட்டுமே பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள். அதனால் 2060, 2070 களில் பெண்களின் தொகை பாதியாகக் குறைந்து போகும். இந்த சூழல் ஒரு பெண் இரண்டு ஆண்களை திருமணம் செய்து ஒரே கட்டிலில் உடலுறவு கொள்ளவேண்டிய நிலையை உருவாகும். ஆகவே பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும்.” என்று சொல்லிப் போகிறது படம்.

இந்த ஆணாதிக்க குறும்படம் திரைமறைவில் மீளச் சொல்லும் செய்தியை உற்றுக் கவனித்தால், செய்தி இப்படி வருகிறது, "பெண்கள் உயிர்கள் என்கிற காரணத்துக்காக பாலியல் வன்கொடுமையை நிறுத்தச் சொல்லவில்லை, பெண்கள் சமூகத்தின் சம மனிதர்கள் காரணத்துக்காக பாலியல் வன்கொடுமையை நிறுத்தச் சொல்லவில்லை, இன்னும் இருக்கக்கூடிய நியாயமான காரணங்களுக்காக பாலியல் வன்கொடுமையை நிறுத்தச் சொல்லவில்லை, வரும்காலத்தில் எங்களது காம இச்சைகளைப் போக்க பெண்கள் ஒவ்வொருவரும் இரண்டு பேருடன் ஒரே கட்டிலில் கட்டாயமாக உடலுறவு கொள்ள வேண்டி வந்து விடும். அப்புறம் நாங்கள் கட்டிக்காக்கும் கற்பு காணாமல் போய்விடும், பிறக்கும் பிள்ளைக்கு யார் அப்பா என DNA சோதனையில்தான் கண்டுபிடிக்க வேண்டி வரும், பெண் ஒரு ஆணின் சொத்தாக இருக்க முடியாது போய்விடும், சொத்துக்களை வாரிசுகளுக்கு கடத்துவதில் சிக்கல் வந்துவிடும், இந்தக் காரணங்களுக்காக சந்தையில் பெண் எனும் பண்டத்தின் உற்பத்தி குறைவதற்குக் காரணமாக இருக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு மரண தண்டனை கொடுங்கள்."

படம் முடிந்தவுடன் ஒருமுறை காறி உமிழ்ந்துவிட்டு, வீடியோவுடன் இணைக்கப்பட்ட குறிப்பில் இருந்த படக்குழுவின் முக்கிய பெயர்களைப் பார்த்தேன். படத்தில் நடித்த மையக் கதாப்பாத்திரத்தின் பெயரைத் தவிர மற்ற எல்லாப் பெயர்களும் ஆண்களின் பெயர்கள். பாலியல் வன்கொடுமையைப் பொருத்தவரை பெரும்பாண்மை ஆண்களின் நிலைப்பாடு தங்களுக்கு புணர்வதற்கு வருங்காலத்தில் பெண்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்கிற அளவில்தான் இருக்கிறது என மீளவும் சொன்னது அந்தப் பெயர்ப்பட்டியல்.

கேட்டால் குரலற்றவர்களின் குரலாக இருக்கிறோம் எனப் பீத்திக்கொண்டுவருவார்கள். கொஞ்சம் வாயைப் பொத்திவிட்டு கையில் பறித்துவைத்திருக்கும் ஒலிவாங்கிகளை அருகில் இருக்கும் பெண்களிடம் கொடுங்கள். அவர்கள் பேசத்தொடங்கட்டும். அவர்களுக்காக பேசும் உங்கள் அரைகுறை மேதாவித்தன வாய் குப்பையை விட அதிகம் நாறுகிறது.

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?