கடவுள் இருப்பாராக...

மரணமும் மரணத்தின் மீதான பயமும் மரணத்தின் பின்னரான நிச்சயமின்மை குறித்த அச்சமும்தான் கடவுளை இன்று வரை காப்பாற்றி கொண்டிருக்கிறது, என நீண்ட காலத்திற்கு முன்பு வரை நம்பியிருந்தேன். ஆனால் அது உண்மையாகத் தெரியவில்லை. மனிதர்கள் மரணத்தை விடவும் வாழ்வைப் பார்த்தே மிகவும் அஞ்சுகிறார்கள். கையறு நிலை தான் கடவுளையும் கோயில்களையும் இன்றுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

எங்களுக்கு ஒரு கடவுள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார். காரணம் ஒன்றும் பெரிதாய் இல்லை. எங்களுக்கு ஒரு துன்பம் வரும்போது எங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அதை சொல்வதற்கு இன்னொருவரை தேடுகிறோம். நாங்கள் எங்களது பிரச்சினையை சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அதை தங்களுடைய பிரச்சனைகளுடன் ஒப்பிட்டு இதற்காகவா கவலைப்படுகிறாய் என்று சொல்லாத ஒரு நபரை, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று சொல்லாத ஒரு நபரை, உனக்கு வேற வேலை இல்லை என்று சொல்லாத ஒரு நபரை, இது நீயாக தேடி கொண்டது என்று சொல்லாத ஒரு நபரை நாங்கள் எல்லோரும் தேடுகிறோம். குறைந்தபட்சம் நாங்கள் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நபரை தேடுகிறோம். 

அப்படியான மனிதர்கள் எங்களைச் சூழ குறைவாகவே இருக்கிறார்கள். துன்பத்தில் இருக்கும் ஒரு மனிதனுக்கு ஆற்றுப்படுத்தல் வழங்க தெரிந்தவர்கள் மிகவும் சொற்பமாகவே இருக்கிறார்கள். ஆனால் இந்த பிரச்சினை கடவுளிடம் இல்லை. கோயிலுக்கு சென்றோ செல்லாமலோ, நீங்கள் உங்கள் கவலைகள் முழுவதையும் கடவுளிடம் கொட்டித்தீர்க்கலாம். தீர்வு வருகிறதோ இல்லையோ ஒருவரிடம் உங்கள் கவலைகளை கொட்டித்தீர்த்த நிம்மதியாவது கிட்டுகிறது. இது தான் கடவுளை தொடர்ந்தும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. கையறு நிலையில் இருக்கின்ற ஒரு மனிதன் தனக்காக ஒருவர் இருக்கிறார், என்கிற இறுதி நம்பிக்கையாக கடவுளைக் காண்கிறார்.

எங்களால் உலகிலுள்ள அத்தனை மனிதர்களுக்கும் ஆற்றுப்படுத்தல் வழங்க முடியும் என்கிற ஒரு நிலை உருவாகும் போது இந்த கடவுள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போவார். கடவுளின் நீடித்த இருப்பு என்பது, மற்றவரின் பிரச்சனையை நிதானமாக கேட்டுக் கொண்டிருக்க கூடிய மனிதர்களை நாங்கள் உருவாக்குவது இல்லை என்கிற ஒரு சமூக பிரச்சனையின் வெளிப்பாடு. சக மனிதனுடன் தன்னுடைய பிரச்சனையை பகிர்ந்து கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை நாங்கள் வழங்கவில்லை என்பதற்கான குறியீடு. இந்தக் குறையை இந்த சமூகம் களையும் வரை கையறு நிலையில் இருக்கும் மக்களின் பிரச்சினைகளை கேட்டுக்கொண்டிருக்க கடவுள் இருப்பாராக.

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?