ஆக்கிரமிப்பு


எங்கள் வீட்டு நாய்க்குட்டிக்கு
ஒரு பழக்கம் இருக்கிறது.
தான் அமரும் நாட்காலிகளை
தனது என்று அடம்பிடிக்கும்.
அருகில் போனால் உறுமும்.
பயமுறுத்தி கதிரையில் ஒய்யாரமாய்
சுருண்டு படுக்கும்.

சிலகாலம் முன்பு சிறுநீரை அதன்
உடமையை நிறுவும் கருவியாய் அது பயன்படுத்திய நினைவு இருக்கிறது.
சரியாய் சொல்வதானால் 
அந்தச் சிலகாலம் ஒரு தசாப்தமாக இருக்கலாம்.

நிலத்தை கால்களால் தோண்டி
தானே வைத்த எலும்புகளை மீளத்தோண்டி
அந்த இடத்திலேயே படுத்துக் கிடக்கும் பழக்கமும் இன்றளவும் இருக்கிறது.

பற்கள் நறுக உறுமும் வாய்
நிலம் தோண்டும் கால்கள்
சிறுநீர் கழிக்கும் குறி என
உறுப்புகள் வெறும் உத்திகளே
செயல் மட்டும் எல்லாக் காலத்திலும் ஒன்றே.

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?