நிறக்குருடனின் மடல்


அன்புள்ள அனுர,
ஒரு அப்பாவி நிறக்குருடனின் மடல் இது
நீங்கள் இப்போது
ஒரு புதிய நிறத்தை வரிந்திருப்பதாக
நண்பர்கள் சொன்னார்கள்
எனக்கு முன்னமும்
நிறக் குருடு இருந்ததால்
உங்கள் பழைய நிறத்தையும்
என்னால் பிரித்துப் பார்க்க இயலவில்லை
மன்னிக்கவும்.

இப்போது இந்தக் கடிதத்தை
நீங்கள் வரித்திருக்கும் நிறத்தை
அறியவேண்டி வரைகிறேன்.

அன்புள்ள அனுர
இப்போதும் நீங்கள்
எல்லா இனவாதமும்
ஒரேமாதிரியானவை என்றுதானா
சொல்கிறீர்கள்?
பேரினவாத என்ற சொல்லுக்கு
இணையான சிங்களச் சொல்லை
நீங்கள் இன்னமும்
கண்டடையவில்லையா?

எட்டை ஒன்பதாக்கியதை
இப்போதும் கூட்டங்களில்
பெருமையடிக்கிறீர்களா அனுர?
பழைய (போர்க்)குற்றம் பற்றியும்
புதிய (போர்த்)தளபதி பற்றியும்
எப்போது பேசுவீர்கள் அனுர?

சிதறிய தலைகள்
அதைப் பார்த்து அழுத கண்கள்
காணாமற்போன உறவுகள்
அதைப் பார்க்கக் கிடைக்காது அழுத கண்கள்
குதறப்பட்ட உடல்கள்
அதைப் பார்க்க முடியாது மூடி அழுத கண்கள்
எப்போது நீங்கள் பார்ப்பீர்கள் அனுர?
எப்போது பேசுவீர்கள்?
எப்போது அனுர?

தமிழர்களுக்கு தீர்வு
எனக் கேட்டால்
சுயநிர்ணயம் சுயாட்சி என்ற
சொற்கள் கேட்டால்
அதற்குப் பதிலுரையாற்றிய பின்னர்
நீங்கள் பூக்கும் புன்முறுவலில்
ராஜபக்சேக்களை கண்டதாய்
அதே நண்பர் சொன்னார்
உண்மைதானா?

மலையகத்தில் சம்பளம் மட்டும்தானா
பிரச்சினை?
காணி வீடு எல்லாம் வறுமைப்
பிரச்சினைதானா அனுர?
அவர்கள் இந்திய ஆதிக்கக் கூறுகள் என
உங்கள் முன்னோர்கள் சொன்னார்களாமே
நீங்களுமா சொல்கிறீர்கள்?

அப்படியே முஸ்லீகள்
குருதி வழிகிறதே
அதற்கும் உங்கள்
"எல்லா இனவாதமும்"
பல்லவிதானா அனுர?
அனுர,

ஊழல் ஊழல் என்று நீங்கள்
உறுமியதாய் நண்பர் சொன்னார்
நடந்ததும் ஊழலால்
நடப்பதும் ஊழலால்
தடுக்காவிட்டால் நடக்கப்போவது
ஊழலால் என்று
ஊழல் கீதம் மட்டுமே
உரைக்கிறீர்களாமே?

முதலாளித்துவம் எனும் சொல்லை
நீங்கள் மேடைகளில் சொல்லி
எத்தனை நாட்கள் ஆகிறது அனுர?
உங்கள் பெரியவர்கள்
எதும் நினைத்துக் கொள்வார் என்று
நீங்கள் நினைத்துக் கொண்டீர்களா?

காலில் விழும்போது
மகாநாயக்கர்களின் பாத அழுக்குகளை
துடைத்து விட்டது பற்றி
அவர்கள் மகிழ்வடைந்தார்களா?
முக்கியமானதை மறந்து விட்டேன் அனுர,
அடுத்த வருட
மேதினம் எப்போது வரப்போகிறது?
அதையும் அவர்களிடம் கேட்டுத்தான்
சொல்ல முடியுமா, அனுர?

இப்படி,
நிறைய கேள்விகள் இருக்கின்றன அனுர,
பதில்கள் கிடைத்தால்
கணக்குப் போட்டு
நிறத்தை கண்டடைய வசதியாய் இருக்கும்
அன்புள்ள அனுர.

ஒருவேளை பதில் சொல்ல
சங்கடப்பட்டாலோ
அதிக கேள்விகள் என்பதால்
நேரமில்லாமற் போனாலோ
இந்தக் கேள்விக்கு மட்டும்
பதில் சொல்லுங்கள்
இப்போதும் உங்கள் நிறம் சிவப்பில்லைத்தானே,
அன்புள்ள அனுர?

இப்படிக்கு
அன்புள்ள
நிறக் குருடன்

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?