சுதந்திரத்தின் இரண்டு அறைகள் - அத்தியாயம் 1

 

சொற்கள் பயனற்றுப் போகும் உரையாடல்


தேவையான பொழுதோன்றில் கிடைக்காதுபோகும் பொருத்தமான சொல், தேவையில்லாது ஒரு வசனத்தில் வந்து சேர்ந்து சங்கடம் தரும் பொருத்தமற்ற சொல் என ஒற்றைச் சொல்லால் சிக்கலாக்கிப் போகின்றன பல உரையாடல்கள்.  மொழியின் கரையில் குதித்து ஒரு சுழியோடி போல மொழியின் ஆழம் அளந்து இலாவகமாய் மேலெழுந்து வருகின்ற அளவுக்கு மொழியில் தேர்ச்சி கண்டவர்கள் கூட ஒரு சில சொற்களுக்குத் தன்னும் சறுக்கியே விடுகின்றனர். சொற்கள் அத்தனை உயர்ந்த சறுக்குமரமோ என்னவோ.

சொற்களைக் கோர்த்து விளையாடும் விளையாட்டு, சொற்களின் மேலே பழி போட்டுத் தப்பித்துக்கொள்ளும் விளையாட்டு என்று பல விளையாட்டுக்கள் நடக்கும் உரையாடல்கள் அதிகம்.

ஒரு உரையாடலையே தரித்து நிற்கவைக்கும், திசைமாற்றும், நிலை குலைக்கும் இல்லையேல் நிறுத்தியே விடுகின்ற ஒற்றைச் சொற்களின் பொதுத்தன்மையை நீங்கள் எப்போதாவது ஆராய்ந்ததுண்டா?  அப்படி ஆராய வைத்த கடைசிச் சொல் என்ன என்று ஞாபகம் இருக்கிறதா

நான் சில சமயத்தில் மேலோட்டமாய் சிந்தித்திருக்கிறேன். தேவையானபோது வராமல் மூளையின் அடியாளத்தில் ஒழிந்து கொண்ட சொற்களை, இதோ வாய் வரைக்கும் வந்துவிட்டது என்று சொல்லிச் சமாளிக்கும் சொற்களைத் தூரத்திப் பிடித்து வெற்றிகாண்பதில் ஒரு சிறு இன்பம் கிட்டுவதால் எனக்கு அந்தச் சொற்கள் இலகுவில் மீண்டும் மறந்து விடுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தேவையெல்லாம் காற்றில் கரைந்த பின்னர் வேறு ஒரு இடத்தில் அந்தச் சொல் நினைவுக்கு வந்து இன்னொரு உரையாடலைத் திசை திருப்பும் சந்தர்ப்பங்களில் அந்தச் சொல் இன்னமும் விசேடமான சொல்லயாகிவிடும். அப்படிப்பட்ட சொற்களைத்தான் அதிகம் சிந்தித்து இருக்கிறேன்.  

உண்மையைச் சொல்லப் போனால் சங்கடங்கள் தந்துவிட்டுப் போன பொருத்தமில்லாச் சொற்களை வலிந்து முயற்சி செய்து மறந்திருப்பதால், அவற்றை ஆய்வுகள் செய்ய முயன்றதில்லை.  ஏன் அந்தச் சொல்லைப் பயன்படுத்தித் தொலைத்தேன் என, என்னை நானே மீள மீள நிந்தனை செய்யும் விருப்பம் எனக்கு இல்லாததால் அந்தச் சொற்களை அப்படியே போக விட்டுவிடுவேன்.

என்னிடம் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. நான் வகைப்படுத்தி வைத்திருக்கிறேன். வராமற்போய், நினைவில் வந்தால் பிறகு சொல்கிறேன் என்று தொடர்ந்த உடையாடல்களின் சொற்கள். வராமற்போய், உரையாடலை தரித்து நிறுத்தி சொல்லை கண்டுபிடித்துத் தொடர்ந்த உரையாடல்களின் சொற்கள். வராது போனதால் நின்றுபோன உரையாடல்களின் சொற்கள்.

நன்கு வகைப்படுத்தப்பட்ட மூன்று பட்டியல்கள். பொதுவாக அந்தச் சொற்கள் நான் கண்ணால் கண்டவையாகவோ என்னிடம் அந்தந்தக் கணங்கக்களில் இருப்பவையை  சுட்டுவனவாகவோ இருப்பதில்லை. சடப் பொருட்களைக் குறிக்கும் சொற்களாக அவை இருப்பதும் அரிதாகவே நடக்கிறது. பெரும்பாலும் என்னிடம் இல்லாதவை, எனக்கும் எப்போது கிடைக்கமுடியாதவை என்பது அவற்றின் பொதுத்தன்மைகளில் ஒன்றாகி விடுகிறது. மற்றைய தன்மை, நான் கற்பனைகளிலும் கருத்தியல் வெளிகளிலில் அலைந்து திரிந்தபோதும் என் மூளைக்குள் பதிவான சொற்கள். உணர்வுகளாகவும், சிந்தனைகளாகவும் கிடக்கின்றன அவை.

நேற்று ஒரு சொல் கிடைக்காமல் ஒரு தொலைபேசி உரையாடல் நின்றுபோனது. செலவு மிகுந்த வெளிநாட்டு அழைப்பு. மன்னிக்கவும், ஒன்றல்ல இரண்டு அழைப்புக்கள். இந்தியாவில் இருந்து கனடாவுக்கான அழைப்பு ஒன்று. இலங்ககையில் இருக்கும் அம்மாவுக்கான அழைப்பு இன்னொன்று.

இனியும் ஏன் என்னால் இங்கு இருக்கமுடியாது என்பதற்கான காரணங்களைச் சொல்லி இலங்கைக்கு திரும்பி வருவதற்கு காசு அனுப்பக் கேட்டு அம்மாவுக்கும் மாமாவுக்கும் எடுத்த அழைப்புகள். தொடங்கிய மாத்திரத்திலேயே சொல் ஒன்று மறந்துபோய் விட்டது. இந்த இடம் என்னை எப்படி உணரச் செய்கிறது என்பதை சொல்லுவதற்கு தேவையான சொல் ஒன்றுதான் வராமல் தடுமாறுகிறது என நான் நன்கு உணர்ந்து கொண்டேன். ஒரு சொல்லை விளக்க பல வாக்கியங்கள் உதிர்த்தேன். பயனில்லை. "இங்கு இருக்கவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு..." என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தேன். தொலைபேசியின் எதிர்முனையில் இருந்த இருவரும் இந்தக் கணத்தில் இந்த இடத்தில் இல்லாதவர்கள், சரியான சொற்களால் அவர்களின் காதைத் துளைக்காவிட்டால் எனக்கான கதவுகள் திறக்காது எனத் தெரிந்து கொண்டேன்.    

உரையாடல்கள் துண்டிக்கப்பட்ட மாத்திரத்தில் இரண்டு உரையாடலிலும் இருந்த மூவரையும் கடிந்து கொண்டேன். இரண்டு உரையாடலுக்கும் பொதுவாக இருந்த என்னை அதிகம் கடிந்து கொண்டேன்.

தேவையானபோது கிடைக்காமல் போகிற சொற்களின் பொதுத் தன்மை பற்றி பேசிக் கொண்டிருந்தோம் அல்லவா? அந்தச் சொற்களுக்கு பொதுத்தன்மை இருப்பதைப் போலவே, தரித்துப்போன அந்த உரையாடல்களுக்கும் பொதுத் தன்மை இருக்கிறது. அந்த உரையாடல்களில் சொல்லப்பட்ட மற்றைய சொற்கள் எல்லாம் பயனற்றுப் போன உரையாடற்களாக அவை மாறிவிடுகின்றன. அங்கு அதற்குமுன்னர் சொல்லப்பட்ட எந்தச் சொற்களுக்கும் எந்தப் பெறுமதியும் இல்லாமற் போய்விடுகின்றன.  "மாமா எப்படி இருக்கிங்க? வீட்டில எல்லாரும் நல்லம் தானே?" என்று நான் கேட்ட சொற்களில் ஒட்டியிருந்த அன்பிறக்கான பெறுமதியும் தொலைந்துபோனது.  

நேற்றுத் தரித்துப் போன உரையாடல் வெறுமனே இன்னொரு பயனற்ற உரையாடல் அன்று. என்னை அதிகம் பொறுப்பற்றவனாய் சித்தரித்திருக்கும் உரையாடலும் கூட என்பதை நான் உணர்வேன்.

மூன்று வருட காத்திருப்பில் சலித்துப்போய் நீண்டகாலமாய் நான் தொலைத்து இருந்த என்னை மீளப் பெறுவதற்கான உரையாடல், 'சுதந்திரம்' எனும் ஒற்றைச் சொல்லால் நின்றுபோனது. எனக்கு அந்நியமான சொல்லில்லையே அது. ஒவ்வொரு வருடமும் எனது நாட்டின் சுதந்திரதினம் வருகிற பெப்ரவரி மாதத்தில் பல தடவை விடுமுறையைச் சுட்ட சொல்லும் சொல்தானே. வருடத்தின் முந்நூற்று அறுத்தி ஐந்து நாட்களில் பாதி நாட்களில் செய்திகளில் அந்த நாட்டின் சுதந்திர தினம், இந்த நாட்டின் சுதந்திர தினம் என்று வாசிக்கப்படுகையில் கேட்டுக் கேட்டு பழகிப் போன சொல்தானே. ஒரு வாரத்திற்கு முன்னரும் இந்த அந்நிய நாட்டின் சுதந்திர தின உரையில் வாஜ் பாய் எதையோ சொன்னதாக ஒரு பத்திரிகைச் செய்தி வாசித்த ஞாபகம். தினமும் இல்லாவிடிலும் ஒரு வாரத்திற்கு சிலதடவை கேட்கும் சொல்தானே அது. பின்னர் ஏன் என் மூளையின் அடியில் அது ஒழிந்துகொண்டது.

தொலைந்து போகும் என் சொற்களின் பொதுத்தன்மை துல்லியமாகிக் கொண்டே வருகிறதுதான் போலும். இப்போது யோசித்துப் பார்க்கையில் ஒருவேளை சுதந்திரம் என்கிற சொல் நினைவுக்கு வந்து, "நான் இங்கே சுதந்திரமாகவும் இல்லை, ..." என்று தொடங்கி அடுத்த சொல்லாக கோர்ப்பதற்கான 'நிம்மதி' என்ற சொல்லையும் நான் தொலைத்திருக்கலாம். இரண்டு சொற்களை நினைத்து புலம்பியிருப்பேன். ஒன்றோடு போனது.

"நான் இங்கே சுதந்திரமாகவும் இல்லை, நிம்மதியாகவும் இல்லை... "

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?