சுதந்திரத்தின் இரண்டு அறைகள் - அத்தியாயம் 2

அணிலை என்னவென்று அழைப்பாய்?


தென்னை மரத்தின் வட்டுகளுக்கு நடுவில் இருந்து இறங்கி வருகிறது, பாதி வளர்ந்த அணில் ஒன்று. பிள்ளைப்பருவம் கடந்த அணில். அது இறங்கும் வேகம் சொல்லிவிடுகிறது கூட்டைத் தாண்டிய அதன் அனுபவத்தின் மட்டுப்பாட்டை. அது பயந்து பயந்துதான் இறங்குகிறது. வளவின் ஒரு மூலையில் இருக்கும் தென்னையில் இருந்து இன்னொரு மூலையில் இருக்கும் கொய்யாவிற்கு செல்லவேண்டும். பைய இறங்கிவருகிறது. பைய நடை போடுகிறது. உண்மையில் அதைப் 'பையப் பாய்தல்' என்று சொல்ல விரும்புகிறேன். அந்த நடையில் அல்லது தவழுகையில் ஒரு அமைப்பு முறை இருக்கிறது, அது ஒரு தோரணம். தென்னை மரத்தின் தண்டில் இருந்து கால்களை சின்னதாய் உயர்த்தி சின்னதாய் நகர்த்தி வேகமாய் சில அடிகள். அப்படியே நிறுத்தி மரத் தண்டோடு ஒரு கணம் ஒட்டிப் படுக்கை. தலைதூக்கி சுற்றிப் பார்த்து ஆபத்தைக் கணித்து சிறிதாய் ஒரு பாய்ச்சலைத் தொடர்ந்து வேகமாயச் சில சின்ன அடிகள், பின்னொரு படுக்கை. பையப் பாய்தல் இது.

மரத்திலிருந்து மதிலுக்கு தாவல். பின் மதிலிலும் பையப் பாய்தல். தோரணத்தை ஒத்த நடை. அதன் வாலாட்டாலும் தோரணமே. சுவற்றிலலோ மரத்திலோ ஒட்டிப் படுத்து அசையாது இருக்கும் பொழுதில் மாத்திரம், அந்தக் கணப்பொழுதில் மாத்திரம் வாலை மெதுவாகத் தூக்கி இடப்பக்கம் ஒரு ஆட்டுகை, அப்படியே வலப்பக்கம் ஒரு ஆட்டுகை. நடைக்குள் ஒளிந்திருக்கும் சிறு நடனம். ஓடும் சமயத்தில் வாலை மேலெழுப்பி வைத்துக்கொள்ளும். அணிலிடம் ஒரு நளினமும் இருக்கிறது. நடக்கும் போதும் சரி, சாப்பிடும் போதும் சரி, அது அதி கவனத்தோடே எல்லாவற்றையும் செய்கிறது. அணில் ஒரு அட்டகாசமான குட்டி விலங்கு.

கண்ணுக்கு முன்னர் ஓடித் திரிந்த அணில் என் மூளைக்குள்ளும் ஓடுகிறது. எல்லா மூடுக்குகளையும் ஆராய அது துடிக்கிறது போல. கண்வெட்டாமல் நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது எனக்கு இருந்த அதே ஆர்வத்தோடு அது இப்போது ஓடித் திரிகிறது.  

மூளைக்குள் ஓடிப் போய், சத்தியன் தனது மனதுக்கு சொன்னதாய் நான் எழுதிய "நான் இங்கே சுதந்திரமாகவும் இல்லை, நிம்மதியாகவும் இல்லை..." என்கிற வசனத்தைக் கொரிக்கத் தொடங்கியது.

ஏன் இந்த அணில் இப்போது அந்த வசனத்தை கொரிக்கிறது? அதற்கு ஏன் தேவையில்லாத வேலை. தூரத்தில் இருக்கும் உணவுகளை இலகுவாகக் கண்டுபிடிக்கும் அதன் மூக்கினை, அந்த வசனத்தின் எந்தச் சொல் ஈர்த்திருக்கும்? 'சுதந்திரம்' சுவையாக இருக்கும் என்று கொரிக்கத் தொடங்கியிருக்குமோ?

இல்லாவிடில் சுதந்திரத்திற்கு ஒவ்வொருவரும் கொடுக்கும் பொருட்கோடலில் வித்தியாசங்கள் இருப்பதைப் பார்த்துக் கொரித்துப் பார்த்து உறுதி செய்ய எண்ணியதோ தெரியவில்லை.

பொருட்கோடல் பற்றிய என் சந்தேகம் உண்மையாய் இருந்தால், மூளைக்குள் ஓடத்தொடங்கிய அணில் சத்தியனின் வார்த்தைகளை காண்பதற்கு முன்னர் மாறனின் வார்த்தைகளை மூளையின் இன்னொரு மூடுக்கில் கண்டிருக்க வேண்டும்.

மாறன் சுதந்திரத்தை தேடி போக நினைக்கும் நிலத்திலிருந்துதான், எப்படியாவது தப்பி மாறன் இருக்கும் நிலத்திற்கு சுதந்திரம் தேடி சத்தியன் வருவதற்காக புறப்பட்டுக் கொண்டிருக்கிறான். அணிலின் சின்ன மூளை இவற்றைப் பார்த்து எப்படிப்பட்ட முரண் என சிந்தித்திருக்கக் கூடும். மனிதர்கள் சிக்கலாக்கி விட்டிருக்கும் உலகை அணிலின் கண்ணால் அளந்துவிடமுடியாதென்பது அணிலுக்குத் தெரியாது. அது தனக்குத் தெரிந்த முரணை உரசிப்பார்க்கிறது.

ஒருவன் தான் நினைத்ததை செய்யமுடியாத, நிச்சயமில்லாத, அஞ்ஞாதவாசம் செய்கின்ற தனது வாழ்க்கையைச் சுதந்திரமில்லாததாகப் பார்க்கின்றான். இன்னொருவன் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்க்கையை அப்படிப் பார்க்கிறான். இரண்டு பார்வையும் சுதந்திரத்தின் பகுதிகளைத் தாங்கியவையே. ஆனால் அணிலைப் பொருத்தமட்டில் முழுமையாக இல்லாததை அவர்கள் சுதந்திரம் என்று சொல்வதை ஏற்க முடியவில்லை போலத்தான் படுகிறது.

சுதந்திரத்தின் பாதிக் குணத்தையே சுதந்திரமாகக் காணும் மனித மூளையை அது கேள்வி கேட்க எண்ணுகிறது.

"பிக் பிக் பிக்... பிக்..."  சுதந்திரத்தைக் கொரிப்பதை நிறுத்திவிட்டு கீச்சிட்டது அது.

"பாதியைக் கூட முழுமை என்பாயா? தாவியதைக் கண்டாலே அணில் என்பாயா? கோரித்துக் கொண்டிருந்தால் அணில் என்பாயா? ஒவ்வொரு விலங்கிடமும், அணில் என்று சொல்லத் தேவையான ஏதோ ஒன்று இருக்கலாம் தானே, அவற்றையெல்லாம் அணில் என்பாயா? அப்படியென்றால் அணிலை என்னவென்று அழைப்பாய்?" அணில் கீச்சிட்டதை எனது மூளை மொழிபெயர்ப்பு செய்து கேட்டது.

ஒவ்வொருத்தரையும் வெவ்வேறு அடிமைச் சங்கிலிகள் பிணைத்திருந்தால், அவற்றில் இருந்து விடுபடுவதுதான் அவர்களுக்கு அந்தக் கணத்திற்கான சுதந்திரப் போராட்டம் ஆகிவிடுகிறாதில்லையா? ஒரு விலங்கு உடைகையில் இன்னொன்று ஒட்டிக்கொள்வதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கான வாய்ப்புகள் எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை என்பதையெல்லாம் நான் அணிலுக்கு விளங்க வைக்க முடியாதல்லவா?

அணிலுக்கு விளங்காது போயினும் இருவரும் சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்கவே தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கிட்டு விரிந்து கிடக்கும் இந்தக் கடல்களின் எதிர் எதிர்க் கரைகள் இருவரதும் சுதந்திரம் தொடங்கும் கோடுகள் என அவர்கள் கருதுகிறார்கள். நள்ளிருளில் அலைகடலில் பயணம். நீச்சல் கூடத் தெரியாதவர்கள் இப்படியொரு பயணத்தை செய்யக் காத்திருக்கிறார்கள். சுதந்திரம் தேடி சீறும் கடலில் சிறு படகில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பயணம்.  

சத்தியனுக்கு இந்தியா வெறுத்துவிட்டது. அந்த நிலமும் அவனை ஒதுக்கிவைத்தே பார்க்கிறது. அந்த நிலத்தின் மீது அவனுக்கு எந்த உரித்தும் கிடையாது. அவனுக்கு உரித்தான நிலம் கடல் தாண்டி இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவன் தொடங்கிய பயணம் வெற்றியடைந்தால் சிலவருடங்களின் பின்னர் அவன் உரித்தாய் பார்க்கக் கூடிய நிலம் கண்டங்கள் தாண்டி இருக்கிறது. ஆனால் இப்போது அவன் பழைய பயணத்தை வேண்டாம் என ஒதுக்கி மீண்டும் நாட்டுக்கே செல்லப்போகிறான்.

மாறனுக்கு இலங்கை இனி வேண்டாம் என்கிற முடிவு. இவனுக்குத் தினந்தினம் உயிருக்கு பயந்து வாழமுடியாது.  இந்த நிலத்தில் மட்டுமல்ல எந்த நிலத்திலும் தனதென்று சொல்ல அவனிடம் ஒரு துண்டுக் காணியும் இருந்ததில்லை. அவன் தேடிப் போகும் நிலம் அவனுக்கு அதைக் கொடுக்கப் போவதும் இல்லை.

அணிலிடம் ஒன்றை மட்டும் சொன்னேன்.

"சத்தியனும் மாறனும் இரண்டு முரண்கள். அவர்களின் சுதந்திரமும் முரண்கள் கொண்டதுதான்."

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?