பொய்களை பிரசவிக்கும் உண்மைகள்

 



இப்போதெல்லாம்
உண்மை என்கிற சொல்லை
புத்திசீவிகள் அழுத்திக் கூறும் பொழுதுகளில்
இரண்டு அடி தள்ளி நிற்கவே விரும்புகிறேன்.
 
கூட்டமொன்றில்
மேடையின் மேலிருந்தோ
அல்லது மேடையை நோக்கியோ
உண்மை என்கிற சொல்
புறப்படுகையில்
எனக்கு அச்சமாயிருக்கிறது.
 
தரவு என்கிற சொல்லை
எப்படிக் கொச்சைப் படுத்தினார்களோ
அப்படியே உண்மைக்கும் செய்கிறார்கள்
புத்திசீவிகள்.
 
இரண்டு மூன்று உண்மைகளைத்
தேடிப் பிடித்து
உண்மையை சுமக்கும் கூற்றின் பின்னால்
சேர்கிற காற்புள்ளியை
அடித்து விரட்டிவிட்டு
முற்றுப்புள்ளிகளை வைக்கிறார்கள்.
 
காற்புள்ளிக்களை பறிகொடுத்த உண்மைகள்
புத்திசீவிகள் கழுவேற்றி விடுவார்களோ
என்கிற பயத்தில்
அவர்களுக்கு வேண்டிய பொய்களை
அப்பாவிகளின் கண்கள் முன்னே
பிரசவித்து
நிதர்சனமான உண்மைகள் என்று
பட்டம் வழங்கும்.
 
பொய்களைப் பிரசவிக்கும்
பலவீனமான உண்மைகளை
நான் வெறுக்கிறேன் என்று
சத்தமாகக் கத்தப் பார்த்தேன்.
 
"நீ இப்போது கத்தி,
பொருளாதாரம் தெரியாத முட்டாள் என்று
ஒரு நிதர்சனமான உண்மையைப் பிரசவிக்க வைக்கப் போகிறாயா?"
மேடையில் இருந்த
புத்திசீவிகளுக்குப் பயந்து
கதிரைக்கு அடியிலிருந்த
உண்மையென்று
காதருகே வந்து கேட்டது.

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?